News

தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்

மட்டக்களப்பு (Batticaloa) – வவுணதீவு – தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் (Ananda Wijepala) பங்குபற்றுதலுடன் நேற்று (13.08.205) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுணதீவு – தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல காணியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்திருக்கிறது என்றும், அந்த காணியினை விடுவித்து மக்கள், அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதன்போது கோரியிருந்தார்.

எனினும், அந்த காணியினுள் நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு துயிலுமில்லம் இருந்ததிற்கான அடையாளங்கள் இல்லையென்றும், விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரி ஒருவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், முழுமையாக இல்லாவிட்டாலும் குறித்த காணியில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒருபகுதியினை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.

இதன்படி, நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு காணியின் ஒருபகுதியினை விடுவிப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது தெரிவித்துள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top