அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ரஷ்ய அதிபர் புடின் பேச்சு நடத்திய நிலையில், மீண்டும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 2 கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அலாஸ்காவில் உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் புடினும் 3 மணி நேரமாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையினால், ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்தம் வரும் என்று உலக நாடுகளிடையே எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையில், எதுவும் சொல்ல முடியாது என்று அமெரிக்க அதிபர் கூறினார். அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டிரம்ப் – புடின் இடையே பேச்சுவார்த்தை நடந்த சில மணிநேரங்களிலேயே, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் 85 டிரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணை மூலம் இந்த தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. முக்கிய 4 பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 61 டிரோன்களை உக்ரைன் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, உக்ரைனின் டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோலோடியாஸி கிராமத்தையும், அடுத்துள்ள ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள வோரோன் கிராமத்தையும் தங்கள் படைகள் கைப்பற்றியதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.