News

காசா நகர் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் உக்கிர தாக்குதல்: மக்களின் வெளியேற்றம் ஆரம்பம்

 

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிடும் நிலையில் அங்குள்ள குடியிருப்பாளர்களை இரண்டு மாதங்களுக்குள் வெளியேற்றுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவ தளபதி எயலா சமிர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவின் எந்த பகுதியும் பாதுகாப்பற்றதாக குறிப்பிடும் பலஸ்தீனர்கள் மீண்டும் ஒருமுறை போரில் இருந்து தப்பிச் செல்வதற்கு மறுப்பை வெளியிட்டு வருகின்றபோதும் சிலர் ஏற்கனவே வெளியேற ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதோடு காசா நகரின் புறநகரங்கள் மீது விமானங்கள் மற்றும் டாங்கிகளில் சரமாரியாக குண்டு வீசி வருகின்றன.

‘காசா நகரத்திலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றும் செயல்முறைக்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே எடுக்கும். மேலும் குடியிருப்பாளர்களை இடமாற்றம் செய்வதில் உள்ள சிக்கல்களுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம், எனவே அவர்கள் நகரத்தை விட்டு மனிதாபிமான பகுதிகளை நோக்கி வெளியேற ஊக்குவிப்பதற்கான பொறிமுறைகளை நாங்கள் தயார் செய்து வருகிறோம்’ என்று இஸ்ரேல் இராணுவத் தளபதி இஸ்ரேலின் ‘செனல் 12’ தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடு பூர்த்தி செய்யப்பட்ட உடன் ‘காசவை சுற்றிவளைத்து, நகருக்குள் நுழைந்து ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்படும்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனர்களை ஏற்பது குறித்து இந்தோனேசியா, சோமாலிலாண்ட், உகண்டா, தென் சூடான் மற்றும் லிபியான என்று குறைந்தது ஐந்து நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து செனல் 12 முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் தென் சூடானுடன் இஸ்ரேல் பேசியதாக ஏ.பி. செய்தி நிறுவனமும் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

காசாவின் 2.2 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தற்போது காசா நகரில் வசிக்கும் நிலையில், அங்கு இஸ்ரேல் முன்னேடுக்கும் திட்டம் பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும் என்று உலக நாடுகள் எச்சரித்து வருகின்றன.

பலஸ்தீனர்களை தெற்கு காசாவை நோக்கி வெளியேற்றவே இஸ்ரேல் திட்டமிடுகிறது. எவ்வாறாயினும் காசாவில் 80 வீதமான பகுதிகள் சிவப்பு வலயமாக இருப்பதோடு அந்தப் பகுதிகளுக்கு செல்வதில் இருந்து பலஸ்தீனர்கள் தடுக்கப்படுவதாக இது தொடர்பிலான வரைபடங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகி உள்ளது. காசாவின் மேற்குப் பக்கம் இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பி வழிவதோடு தெற்கு பகுதியிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

காசா நகரை ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வர்ணித்துள்ளார். என்றாலும், காசாவின் சுமார் 75 விதமான பகுதியை ஏற்கனவே இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றி இருக்கும் நிலையில், இன்னும் இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்துவது அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் அதிகரித்துள்ளது. அதேபோன்று இந்தத் திட்டம் நீடித்த கொரில்லாப் போர் ஒன்றுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

காசா நகருக்குள் இஸ்ரேலிய தூருப்புகள் ஊடுருவும் அச்சம் காரணமாக அங்குள்ள பலஸ்தீனர்கள் மீண்டும் ஒருமுறை இடம்பெயரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளை நெருங்கும் இந்தப் போரில் பெரும்பாலான காசா மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘காசாவில் உள்ள மக்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படும் வரை காத்திருப்பவர்கள் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்’ என்று காசா நகர வர்த்தகர் ஒருவரான டமர் புனை குறிப்பிடடுள்னார். ‘நான் எனது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்துடன் தெற்கை நோக்கி இன்று அல்லது நாளை வெளியேறிச் செல்வேன். எதிர்பாராத ஆக்கிரமிப்பால் அவர்கள் யாரையும் இழக்க நான் விரும்பவில்லை’ என்று அவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை தடுக்கும் முயற்சியாக போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் மற்றும் மத்தியஸ்தர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கடைசியாக இடம்பெற்ற மறைமுக பேச்சுவார்த்தைகள் இழுபறிக்கு மத்தியில் கடந்த ஜூலை பிற்பகுதியில் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்கள் ஹமாஸ் மற்றும் மற்றுமொரு பலஸ்தீன போராட்ட அமைப்பான இஸ்லாமிய ஜயாத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை நேற்றும் (18) தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்கா முன்மொழிந்த 60 நாள் போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஹமாஸ் அமைப்பு மத்தியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளது. எனினும் அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டு ஹமாஸ் அமைப்பு ஆயுதத்தை கைவிடும் நிபந்தனையில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது. இதனை வெளிப்படையாக நிராகரித்துள்ள ஹமாஸ் அமைப்பு பலஸ்தீன நாடு ஒன்று உருவாக்கப்படும் வரை ஆயுதத்தை களைவதில்லை என்று உறுதியாக குறிப்பிட்டு வருகிறது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 60 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 344 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த 22 மாதங்களுக்கு மேல் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டி 62,004 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 156,230 பேர் காயமடைந்துள்ளனர்.

மறுபுறம் இஸ்ரேல் உதவிகளை முடக்கி வரும் சூழுலில் காசாவில் பட்டினியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 263 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 112 பேர் சிறுவர்களாவர். காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் இரு சிறுவர்கள் உட்பட ஐவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு நேற்று அறிவித்த நிலையிலேயே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top