ஹெல்சின்கி:உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த பின்லாந்து எம்.பி., எமலி பெல்டோனன், 30, நேற்று முன்தினம் அந்நாட்டு பார்லிமென்ட் கட்டடத்திற்குள் தற்கொலை செய்து கொண்டார்.
ஐரோப்பிய நாடான பின்லாந்தின் சமுதாய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் எமலி பெல்டோனன். இவர் கடந்த 2023ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறை எம்.பி.,யானார். இதற்கு முன் நகரத் தலைவர் உட்பட பல பொறுப்புகளை இளம் வயதிலேயே வகித்தவர்.
இவருக்கு சிறுநீரக பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பாக அவரே சில நாட்களுக்கு முன் சமூக வலைதளத்தில் தெரிவித்தார். அதில், ‘சிறுநீரக பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்தேன். தற்போது பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் ஓய்வில் உள்ளேன்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பார்லிமென்ட் வந்த அவர், தன் அறை அருகே இறந்த நிலையில் கிடந்தார். அவர் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.