News

காசா போர் நிறுத்த பேச்சுக்கு மத்தியில் மேலதிக துருப்புகளுக்கு இஸ்ரேல் அழைப்பு – அனைத்து பணயக்கைதிகளை விடுவிக்கவும் நிபந்தனை

 

 

ஹமாஸ் அமைப்பு இணங்கிய காசாவில் 60 நாள் போர் நிறுத்த முன்மொழிவு குறித்து இஸ்ரேல் பரிசீலித்து வரும் நிலையில் போரை நிறுத்த அனைத்து பயணக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.

கட்டார் மற்றும் எகிப்து முன்வைத்த இந்த முன்மொழிவில் காசாவில் உள்ள பாதி எண்ணிக்கையான பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பரிந்துரைத்துள்ளது. இது அமெரிக்கா முன்னர் முன்வைத்து இஸ்ரேல் இணங்கிய போர் நிறுத்த முன்மொழிவை ஒத்திருப்பதாக கட்டார் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் இதனை நிராகரிக்காதபோதும் ‘பகுதி அளவான உடன்படிக்கைகளுக்கு’ ஆர்வம் இல்லை என்று இஸ்ரேலிய அரச பேச்சாளர் டேவிட் மென்சர் குறிப்பிட்டுள்ளார். ‘நிலைமை தற்போது மாறிவிட்டது. எதிர்கால காசா தொடர்பில் பிரதமர் (பெஞ்சமின் நெதன்யாகு) திட்டம் வகுத்துள்ளார்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முன்மொழிவின்படி 10 உயிருடன் உள்ள பணயக்கைதிகள் மற்றும் 18 பயணக்கைதிகளின் உடல்கள் விடுவிக்கப்படுவதோடு நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்ததைகள் ஆரம்பிக்கப்படும் என்று பலஸ்தீன தரப்பு இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 22 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் போரில் எஞ்சியுள்ள 50 பணயக்கைதிகளில் தொடர்ந்து 20 பேர் மாத்திரமே உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது.

காசா நகரை கைப்பற்றும் திட்டமாக அங்கு படை நடவடிக்கையை விரிவு படுத்தும் அறிவிப்பை இஸ்ரேல் கடந்த வாரம் வெளியிட்ட நிலையிலேயே போர் நிறுத்த முயற்சிகளும் தீவிரம் அடைந்துள்ளன. பரிந்துரைக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்த முன்மொழிவில் கணிசமான பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட இஸ்ரேலிய சிறையில் இருக்கும் 200 பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதும் அடங்கும்.

‘இஸ்ரேலின் கொள்கை நிலையானது மற்றும் மாற்றம் இல்லாதது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமைச்சரவையினால் எட்டப்பட்ட கொள்கையின்படி அனைத்து 50 பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கு இஸ்ரேல் வலியுறுத்துகிறது. ஹமாஸுக்கு எதிரான தீர்க்கமான இறுதிக் கட்டத்தை நாம் எட்டி இருக்கிறோம். எந்த ஒரு பணயக்கைதியையும் விட்டுவிட முடியாது’ என்று இஸ்ரேலிய அரசியல் வட்டாரம் ஒன்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தற்போதைய முன்மொழிவு தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக இரு இஸ்ரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கான பதிலை எதிர்வரும் இரண்டு நாட்களில் எதிர்பார்க்கலாம் என்று பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட பலஸ்தீன தரப்பு ஒன்றை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தைய போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் உடன்பாடு இன்றி முடிவுக்கு வந்ததோடு கடைசியாக கட்டாரில் பல வாரங்கள் நீடித்த பேச்சுவார்த்தையிலும் இணக்கம் எட்டப்படவில்லை. குறிப்பாக காசாவில் இருந்து இஸ்ரேலிய படை வாபஸ் பெறுவது மற்றும் அங்கு உதவிகளை அனுமதிப்பது தொடர்பில் போர் தரப்புகள் இடையே முரண்பாடு நீடிக்கிறது.

இந்நிலையில் முன்மொழியப்பட்டிருக்கும் புதிய போர் நிறுத்தத்தில், தற்போது காசாவில் 75 வீதத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்ரேல் அங்கிருந்து பகுதி அளவு வாபஸ் பெறுவதற்கும் அதிக மனிதாபிமான உதவிகள் செல்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் காசாவில் போர் நிறுத்தத்திற்கான எந்த சமிக்ஞையும் இன்றி இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதில் காசா நகரை இலக்கு வைத்து அண்மைய நாட்களில் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதோடு இஸ்ரேல் ஆதரவில் முன்னெடுக்கும் உதவி விநியோக மையங்களில் உதவிக்காக காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.

காசா நகர் மீது எதிர்பார்க்கப்படும் படை நடவடிக்கைக்காக இஸ்ரேல் இராணுவம் ஆயிரக்கணக்கான மேலதிக துருப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. என்றாலும் எதிர்வரும் செப்டெம்பர் வரை மேலதிக துருப்புகள் பணிக்கு திரும்ப மாட்டார்கள் என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்த முயற்சிகளுக்கு வழிவகுக்கும் வகையிலேயே இது உள்ளது.

காசா நகரை கைப்பற்றும் வகையில் காசாவில் படை நடவடிக்கையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு பிரதமர் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காசாவின் 2.2 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் காசா நகரிலேயே தங்கி இருந்தபோதும் அண்மைய நாட்களில் இஸ்ரேலிய தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

காசா நகரின் புறநகரங்களில் இஸ்ரேலின் தொடரும் உக்கிர தாக்குதல்களில் மேலும் 19 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

‘இம்முறையும் உடன்படிக்கை ஒன்று எட்டப்படாவிட்டால், நாம் அனைவரும் கொல்லப்பட்டு விடுவோம், என்று அஞ்சுகிறேன்’ என்று காசாவில் இருந்து நான்கு குழந்தைகளின் தந்தையான 45 வயது சமிர் அபூ பசல் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி ஊடாக தெரிவித்தார். ‘இங்கேயே சாவது அல்லது அவர்கள் நம்மை எங்கு தள்ளினாலும் சாவது, எல்லாம் ஒன்றுதான். இந்த உலகத்தின் மீதும், நம் தலைவர்கள் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டோம்’ என்றும் அவர் கூறினார்.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு அவர்கள் உதவிக்கு காத்திருந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்களில் பலியான 22 பேரும் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் மேலும் 185 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 62,122 ஆக அதிகரித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேலின் முழு முற்றுகைக்கு மத்தியில் காசாவில் பட்டினியால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் மூன்று பலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top