சிறிலங்கா பாதுகாப்புப் படையினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இன்று (20.08.2025) அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கையில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கும் நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான தீர்மானங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, உரிமைகளை மதிக்கும் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்த போதிலும் அவை மிகக் குறைவாகவே உள்ளதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதுடன், இலங்கையில் நீதிக்கான வாய்ப்புகள் எப்போதும் குறைவாகவே உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு செம்மணி மனித புதைகுழியைப் பார்வையிட்டமை தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த விடயத்தில் உண்மையை வெளிக்கொணரக் கூடிய தடயவியல் நிபுணத்துவம் வாய்ந்த சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
பல தசாப்தங்களாக இலங்கையில் சுமார் 20 மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பில் எப்போதும் விசாரணைகள் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களையும் மனித உரிமைகள் பாதுகாவலர்களையும் புலனாய்வு அமைப்புகள் அச்சுறுத்தும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களை தன்னிச்சையாகத் தடுத்து வைக்கவும் துன்புறுத்துவதற்கும் இலங்கை அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.