சீனா, 50 லட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு ஏற்ற வகையில், 610 சதுர கி.மீ., பரப்பில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலையை திபெத்தில் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நம் அண்டை நாடான சீனா, கார்பன் – டை – ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களை மிகப்பெரிய அளவு வெளியேற்றும் நாடாக உள்ளது.
இது பருவநிலை மாற்றம், பூமியின் வெப்பநிலை உயர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. சமீபத்திய ஆய்வுகள் அந்நாட்டின் கார்பன் உமிழ்வு, 2024 மார்ச் முதல் குறையத் துவங்கியுள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 1 சதவீதம் குறைந்துள்ளதாக கூறுகின்றன.
வரும், 2060ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை, சீனா பூஜ்ஜியமாக்க வேண்டும். இந்த இலக்கை எட்டுவதற்கு, அடுத்த ஒவ்வொரு ஆண்டும் கார்பன் உமிழ்வை, 3 சதவீதம் குறைக்க வேண்டும்.
இதற்காக சூரிய ஒளி மின் உற்பத்தி, காற்றாலை, அணு மின்சக்தி ஆகியவற்றில் சீனா முதலீடு செய்து வருகிறது. இதில், சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் சுற்றுச்சூழலை கெடுக்காத துாய மின்சாரம் எனப் படுகிறது.
சீனாவின் மொத்த சூரிய மின்சக்தியின் அளவு, 10 லட்சம் மெகாவாட். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 2.12 லட்சம் மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யும், ‘பேனல்’களை சீனா நிறுவியுள்ளது. இது, அமெரிக்காவின் மொத்த சோலார் திறனான 1.78 லட்சம் மெகாவாட்டை விட அதிகம்.
இந்நிலையில், சீனாவின் மேற்கில் 2,000 கி.மீ.,க்கு மேல் பரந்து விரிந்துள்ள திபெத் பீடபூமியில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலையை அமைக்கும் பணியில் அந்நாட்டின் மின்துறை ஈடுபட்டு உள்ளது.
இந்த ஆலை, 610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இது அளவில், அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு இணையானது.
தற்போது இந்த பரப்பில், மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. மொத்தமாக 70 லட்சம் பேனல்கள் அமைய உள்ளன. இதன் மூலம் 43,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை வைத்து, 50 லட்சம் குடும்பங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஆனால், இந்த சூரிய மின் உற்பத்தி ஆலை மக்கள் அடர்த்தி குறைந்த மேற்கில் உள்ளது.
இங்கு இருந்து, சீனாவின் கிழக்கிற்கு மின்சாரத்தை கொண்டு செல்ல கிரிட் எனப்படும் கம்பி வடம் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடக்கின்றன.