அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில் 80 ஆண்டுகள் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் 7 தடவைகள் விசேட உரையாற்றியுள்ளார். இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் மூலோபாயம் மற்றும் அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி வெளிப்படையாக குறிப்பிடவில்லை. கடந்த கால ஆட்சியாளர்களை போன்று தற்போதைய ஜனாதிபதியும் செயற்பட கூடாது. கடந்த தீர்வு திட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி தான் எதிர்த்தது. எதிர்த்தவர்களே தீர்வு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே காத்திரமான நடவடிக்கைகளை பகிரங்கமாக அறிவியுங்கள். பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு காண தயாராகவே உள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட உறுப்பினர் எஸ். சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின் போது வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டு வந்துள்ளேன். இலங்கையில் வாழும் சுதேசிய இனத்தவர்களான தமிழ் தேசிய மக்கள் நீண்டகாலம் எதிர்கொண்டு வரும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் இப்பிரேரணையை முன்வைக்கிறேன்.
தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமான நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை எட்டுவதற்கும், அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்த்தை கதவுகளை திறப்பதற்கும், கடந்த எட்டு ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக கைதுகளும், ஊடகவியலாளர்கள் மற்றும் சுயாதீன செயற்பாட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மலையக மக்கள் எதிர்கொள்ளும் காணி, வீட்டுரிமைக்கான கடந்த கால தீர்வு முயற்சிகள் இன்றும். இழுபறிநிலையில் உள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை.
இந்த நாட்டில் தமிழ் தேசிய இனம், சிங்கள தேசிய இனம் என்று இரண்டு தேசிய இனங்கள் உள்ளன. தேசிய இனங்களுக்கிடையிலான நீண்டகால பிரச்சினைகள் சுமார் 80 ஆண்டுகாலமாக நிலைத்திருக்கின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்மாதிரியான நடவடிக்கைகள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. 1957 ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்பந்தம், 1965 டட்லி – செல்வா ஒப்பந்தமும் இந்த நாட்டில் கிழித்தெறியப்பட்டன. இவை அடிப்படை தீர்வாக முன்வைக்கப்படவில்லை.
தமிழ் அரசியல் தலைவர்கள் நீதியான முறையில் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகள், பிரேரணைகள் கிடப்பில் போடப்பட்டன.ஒரு அரசியல் தீர்வுக்கான முக்கிய அடி த்தளத்தையிட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டு 38 ஆண்டுகளை கடந்துள்ளது.இருப்பினும் இந்த ஒப்பந்தம் படுக்கையில் கிடக்கும் நோயாளி போன்றே இன்றும் உள்ளது. எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அரசியல் தீர்வுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச ஒப்பந்தமான இலங்கை – இந்திய ஒப்பந்தம் இன்றும் இழுபறி நிலையில் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சியில் மங்கள முனசிங்க தெரிவுகுழு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.இந்த யோசனைகள் பேசப்பட்ட காலத்தில் எவ்வித தீர்வுகளும் எடுக்கப்படவில்லை.
பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், இலங்கை – இந்திய ஒப்பந்தம், மங்கள முனசிங்க தெரிவுக்குழு யோசனைகள் உட்பட அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 1995-1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொண்ட தீர்வு ஆலோசனைகளின் பிரகாரம் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்றத்துக்கு சட்டமூலமாக தீர்வு ஆலோசனையாக ‘ பிராந்திய கூட்டு’ சமர்ப்பிக்கப்பட்டது. இதுவும் காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டது. சிங்களத் தலைவர்கள் இந்த திட்டங்களை கடுமையாக எதிர்த்தார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் ஓஸ்லோ மற்றும் டோக்கியோவில் வெளியிடப்பட்ட பிரகடனங்கள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சர்வக்கட்சி பிரதிநிதிகள் குழு, பல்லின நிபுணர் குழு அதிகார பகிர்வுக்கு 13 பிளஸ் என்பதை வலியுறுத்தின.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில் 80 ஆண்டுகள் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் 7 தடவைகள் விசேட உரையாற்றியுள்ளார்.
இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் மூலோபாயம் மற்றும் அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி வெளிப்படையாக குறிப்பிடவில்லை.
ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தாய் கட்சி கடந்த காலங்களில் பாரிய போராட்டங்களை எதிர்கொண்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் 62 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.ஆகவே போராட்டங்களின் விளைவுகளை அவர்கள் நன்கு அறிவார்கள்.
இந்த சித்திரவதைகளை நாங்களும் எதிர்கொண்டுள்ளோம். தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக பாரிய போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இழப்புக்கள் மாத்திரமே மிகுதியாகின.யுத்தம் முடி வடைந்ததன் பின்னரும் தமிழ் மக்களின் உடல்கள் பல்வேறு இடங்களில் கண்டறியப்படுகின்றன.தேசிய விடுதலைக்காக ஆயுதமேந்திய போராட்டம் .ஜனநாயக போராட்டங்கள், அரசியல் போராட்டங்கள் ஆயுத முனையில் நசுக்கப்பட்டதால் எம்மக்கள் ஆயுதமேந்தினார்கள்.
இதனை சுட்டிக்காட்டி மேதகு பிரபாகரன் ‘ ஜே.ஆர் ஜயவர்தன சரியான பௌத்தராக செயற்பட்டிருந்தால் நாங்கள் ஆயுதமேந்தும் நிலை ஏற்பட்டிருக்காது’ என்று குறிப்பிட்டிருந்தார்.1952 ஆம் ஆண்டு எமது தமிழ் தலைவர்கள் காலி முகத்திடலில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட போது இராணுவம், பொலிஸ் மற்றும் குண்டர்களை கொண்டு எமது தலைவர்கள் தாக்கப்பட்டார்கள்.
இதன் பின்னரே எமது அறவழி போராட்டங்கள் நசுக்கப்பட்டன. நாங்கள் உங்களிடம் சவா ல்விடவில்லை. ஏட்டிக்குப்போட்டியாக செயற்படவில்லை. எம்மை சமமாக கொண்டு அரசியல் தீர்வுக்குரிய பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
தேசிய இனத்துடனான அடையாளத்துடன் ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகிறோம்.இந்த நாட்டில் பூர்வீக மாக தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள். இயக்கர்,நாகர்கள் வாழ்ந்துள்ளார்கள். நாங்கள் இறையான்மையுடன் வாழ்ந்துள்ளோம்.இந்த இறையான்மை சிங்கள வல்லாதிக்கத்தில் இன்றும் உள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வினையே நாங்கள் கோருகிறோம். ஒன்றுப்பட்ட,தூய்மையான மற்றும் வளமான இலங்கையை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் ஏன் எம்மையும் தேசிய இனமாக இணைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இலங்கை முன்னேற்றமடைய வேண்டுமாயின் அச்சமின்றிய வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். சமாதானத்துக்கான கதவுகளை திறங்கள்.கலந்துரையாடுவதற்கு தமிழ் தலைமைகள் தயாராகவுள்ளோம். எம் மக்களை யார் கொன்று குவித்தார்களோ, அவர்களிடமே விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குற்றம் புரிந்தவர்களே நீதிபதிகளாக இருக்கையில் எவ்வாறு உள்ளக பொறிமுறை ஊடாக நீதி கிடைக்கும்.
யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுப்பிடிக்கப்படும் மனித எலும்புகூடுகள் தமிழர்களுடையது என்பது உறுதியாகியுள்ளது.இயற்கை என்றும் தவறு விடுவதில்லை. இந்த சித்துப்பாத்தி எலும்புகூடுகளை இயற்கையே காட்டிக்கொடுத்தது.இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு பல கடிதங்களை அனுப்பி வைத்துள்ளேன்.இந்த கடிதங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் செயற்பாடுகள், அடக்குமுறைகள், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளேன்.அண்மையில் முத்தையன்கட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மனிதர்கள் தவறிழைக்கலாம். ஆனால் அடித்து கொலை செய்வதற்கு இராணுவத்துக்கு யார் அனுமதியளித்தது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடன் தீர்வு காண வேண்டும்.
1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட போதும் எதிர்ப்பு தெரிவித்தீர்கள், 2000 ஆம் ஆண்டு வடக்குகிழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததும் நீங்கள் வடக்கு கிழக்கை பிரித்தீர்கள். ஆகவே பிரச்சினைகள் உங்களிடம் உள்ளது. கடந்த கால தீர்வுகளை இல்லாதொழிக்க மக்கள் விடுதலை முன்னின்று செயற்பட்டது. ஆகவே தற்போது புதிய முகம் கொண்டுள்ளீர்கள். ஆகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுங்கள்.
வரலாறு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பினை உ ங்களுக்கு வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் விட்ட தவறை இந்த ஜனாதிபதி புரியமாட்டார் என்று எண்ணுகிறோம். கடந்த கால தலைவர்களை இந்த மண் மறந்தை போன்று தற்போதைய ஜனாதிபதியையும் எவரும் மறக்க கூடாது.
ஆகவே வரலாற்றில் ஒரு அடையாளமாக அரசியல் தீர்வு காணுங்கள், காத்திரமான நடவடிக்கைகளை எடுங்கள். தீர்வு திட்டங்கள் என்னவென்பதை அறிவியுங்கள். இந்த பிரேரணை ஊடாக ஒரு புதிய வழி பிறக்கும் என்று கருதுகிறேன் என்றார்.