1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள் ஆயுத தாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பாக. AMM.ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதன்பிரகாரம், களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை, இன்று (25/08/2025), களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற கட்டளை
முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள படி உரிய இடத்தில் புதைக்கப்பட்டுள்ள மனித எச்சங்களை தோண்டி எடுப்பதற்கான கட்டளையை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக நடவடிக்கைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். முறைப்பாட்டாளர் சார்பாக குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர்.
பின்னர் சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியின், கடற்கரை எல்லைப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தின் கௌரவ நீதவான் நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் சம்பவ இடத்தினை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தியதுடன், பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தி இதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கட்டளை இட்டார்.