காசா நகரின் விளிம்பை நோக்கி இஸ்ரேலிய டாங்கிகள் மேலும் முன்னேறி அங்குள்ள வீடுகளை அழித்து வரும் நிலையில் குடியிருப்பாளர்கள் வெளியேறி வருவதாக அங்கிருப்பவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
காசா நகரின் வடக்கு விளிம்பில் உள்ள இபாத் அல் ரஹ்மான் சுற்றுப்புற பகுதிக்கு கடந்த செவ்வாய் இரவு முன்னேறிய டாங்கிகள் வீடுகள் மீது செல் குண்டுகளை வீசியது. இதனால் பலரும் காயமடைந்திருப்பதோடு எதிர்பாராத இந்த முன்னேற்றத்தால் மக்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு வெளியேறும் மக்கள் காசாவின் மிகப் பெரிய நகரின் மையப் பகுதியை நோக்கி தப்பிச் செல்வதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘அனைத்தும் திடீரென்று நிகழ்;ந்தன. இபாத் அல் ரஹ்மானில் டாங்கிகள் முன்னேறி வருவதை நாம் கண்டதோடு வெடிப்புச் சத்தங்கள் உரத்துக் கேட்டன. எமது பகுதிகளில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதை கண்டோம்’ என்று முன்னாள் கட்டுமான தொழிலாளர் ஒருவரான 60 வயது சாத் அபெத் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
‘போர் நிறுத்தம் ஒன்று எட்டப்படாவிட்டால், எமது வீட்டுக்கு வெளியே டாங்கிகளை பார்க்க முடியுமாக இருக்கும்’ என்றும் சாட் செயலி வழியாக காசா நகரின் ஜலா வீதியில் இருக்கும் தனது வீட்டில் இருந்து அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இடம் இபாத் அல் ரஹ்மான் சுற்றுப்புற பகுதிக்கு சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. காசா நகர் மீதான புதிய படை நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேல், அந்த நகர் ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டை என்று கூறி வருகிறது. காசாவின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் சுமார் பாதி அளவானர்கள் காசா நகரிலேயே தங்கி இருப்பதோடு அவர்களுக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் காசா நகரில் இருந்து ஏற்கனவே வெளியேறியபோதும், காசா நகரை விட்டு வெளியேறும் திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதாக அங்குள்ள தேவாலய தலைவர்கள் நேற்று தெரிவித்தனர். ‘தெற்கை நோக்கி தப்பிச் செல்வது மரண தண்டனையாகவே இருக்கும்’ என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ‘இந்த காரணத்தினால் தொடர்ந்து இங்கேயே தங்கி இருந்து தேவாலய வளாகத்தில் அடைக்கலம் பெற்றிருப்பவர்களை பராமரிப்பதற்கு பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தீர்மானித்துள்ளனர்’ என்று ஜெரூசலத்தில் உள்ள கிரிறிஸ்தவ திருச்சபைகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு மொழி பேச்சாளர் அவிசாய் அன்ட்ரேல் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘காசா நகரை விட்டு வெளியேற்றப்படுவது தவிர்க்க முடியாதது’ என்றும் கூடாரங்களை அனுப்பி இஸ்ரேல் அதற்கான வசதிகளை செய்து வருதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘போரின் அடுத்த கட்டத்திற்கு மாறுவதற்கு முன், மத்திய முகாம்களிலும் அல்-மவாசியிலும் உள்ளது போன்று, தெற்குப் பகுதியிலும் பரந்த வெற்றுப் பகுதிகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். இந்தப் பகுதிகள் கூடாரங்கள் அமைப்பதற்கு திறந்ததாக இருக்கும்’ என்று அன்ட்ரேல் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மத்திய மற்றும் தெற்கு காசாவில் போதுமான இடவசதி இல்லை என்பது குறித்து மக்கள் கவலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா பகுதிக்கு சுமார் 1.5 மில்லியன் புதிய கூடாரங்கள் தேவையாக இருப்பதாக பலஸ்தீனர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் காசா போர் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலின் போர் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்க்கப்படும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் சிறப்பு தூதுவர் ஸ்டீவ் விட்கொப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 75 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் 18 பேர் உதவிக்குக் காத்திருந்த நிலையில் இஸ்ரேலிய படை நடத்திய தாக்குதலில் பலியானவர்கள் என்றும் காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் மேலும் 268 பேர் காயமடைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் கடந்த 22 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 62,895 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 158,927 பேர் காயமடைந்துள்ளனர். காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் முடக்கி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் பத்துப் பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் இரு சிறுவர்களும் இருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் தொடர்புபட்டு காகாவில் உயிரிந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 119 சிறுவர்கள் உட்பட 313 ஆக அதிகரித்துள்ளது.