முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த முறைப்பாடுகளானது, பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராகப் போராடும் பல சிவில் சமூக அமைப்புகளினால் பதிவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த அமைப்புகள் சமீபத்தில் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்தத் தகவல்களை பயன்படுத்தி தொடர்புடைய முறைப்பாடுகளை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில், சட்டத்தரணிகள் தற்போது தொடர்புடைய தகவல்களை பகுப்பாய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல கட்டுமானங்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நில மீட்புக் கூட்டுத்தாபனம் மூலம் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், இதுபோன்ற முறைப்பாடுகள் தகவலுடன் சமர்ப்பிக்கப்பட்டால், முறையான விசாரணைகளை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.