ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் அந்த அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதனிடையே, ஜெருசலேமின் வடக்குப் பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையம் ஒன்றில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தன. படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த இடத்தில் இருந்த இஸ்ரேல் வீரர் ஒருவர், பாலஸ்தீனத்தை சேர்ந்தவரை சுட்டுக் கொன்றார். இதனையடுத்து அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். துப்பாக்கிச்சூட்டில் அந்த வழியாக வந்த பஸ் கண்ணாடியும் சிதறி ஒடைந்தது.
அந்த இடத்துக்கு வந்து ஆய்வு செய்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் ராணுவ வீரருக்கு பாராட்டு தெரிவித்தார்.
இஸ்ரேலில் கடைசியாக அக்டோபர் 2024- இல் ஒரு பெரிய துப்பாக்கிச் சூடு நடந்தது. மேற்குக் கரையைச் சேர்ந்த இரண்டு பாலஸ்தீனியர்கள் டெல் அவிவ் பகுதியில் உள்ள ஒரு முக்கியமான சாலையிலும், ரெயில் நிலையத்திலும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹமாசின் ராணுவப் பிரிவு பொறுப்பேற்றது. இந்த இரண்டு பேரும் டெல் அவிவ் நகரின் ஜாபா பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக, ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் நிறைந்த ரெயில் பெட்டியில் சுட்டனர். ஐ.நா.வின் மனிதாபிமான அலுவலகத்தின் தகவல்படி, காசா போர் தொடங்கியதிலிருந்து ஜூலை 2025 வரை இஸ்ரேலில் 49 இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களால் கொல்லப்பட்டனர். அதே காலகட்டத்தில், இஸ்ரேலியப் படைகள் மற்றும் பொதுமக்கள் இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையில் குறைந்தது 968 பாலஸ்தீனியர்களை கொன்றுள்ளனர்.