News

ஜெனிவாவில் ஐ-நா சிறிலங்கா மோதல்! செம்மணி புதைகுழி தீவிர எதிரொலிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க்கும் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் விஜிதஹேரத்தும் வாய்மொழி மூலமாக முன்வைத்தனர்.

ஜெனிவா நேரப்படி இன்று(08) மதியம் இலங்கை தொடர்பான அறிக்கையிடல்கள் வந்தன. முதலில் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மேற்கொண்டார்.

அவர் தனது உரையில் இலங்கை இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவைப்பதற்கு உறுப்பு நாடுகள் பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும், செம்மணி புதைகுழி உட்பட்ட விசாரணைகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்கு அனைத்துலக பொறிமுறைக்கு அனுமதிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

செம்மணி புதைகுழி குறித்த அறிக்கையிடலை ஆணையாளர் செய்தபோது செம்மணி என்ற பதத்தை சரியாக உச்சரிப்பதில் அவர் ஆரம்பத்தில் சிரமப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதேநேரம் இன்னொரு முக்கியவிடயமாக அவர் தனது உரையில் மலையக மக்கள் என்ற தமிழ் பதத்தை நேரடியாக பயன்படுத்தியதையும் அவதானிக்க முடிந்தது.

இந்த நிலையில், ஆணையாளர் வோல்கர் டர்க்கின் உரைக்குப்பின்னர் உரையாற்றிய சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் விஜிதஹேரத் அனைத்துலக விசாரணை பொறிமுறை மற்றும் வெளித்தலையீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அத்துடன், தமது அரசாங்கம் நல்லிணக்க நகர்வுகளை செய்துவருவதால் வெளியக தலையீடுகள் தேவையில்லை எனவும் அவ்வாறான தலையீடுகள் உள்ளக நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் வரவேற்று கருத்து வெளியிட்ட நிலையில் மதிய உணவுக்காக அமர்வு இடைநிறுத்தப்பட்டது. பிற்பகல் அமர்வில் ஏனைய நாடுகளின் கருத்துகள் வெளியிடப்பட்டன.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top