இந்தோனேஷியாவில் எம்.பி.,க்களுக்கான சம்பளம் பல மடங்கு உயர்த்தப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டத்தின் எதிரொலியாக, ஐந்து அமைச்சர்களை நேற்று அதிபர் பிரபோவோ சுபியான்டோ மாற்றினார்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் கடந்த சில ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்னைகளை இளைஞர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தோனேஷியாவின் 580 எம்.பி.,க்களுக்கு வீட்டு வசதிக்கான உதவித் தொகையாக மாதம் 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும் சம்பளமும் உயர்த்தப்பட்டது. இது தலைநகர் ஜகார்த்தாவில் மக்கள் வாங்கும் சராசரி சம்பளத்தை விட 10 மடங்கு அதிகம் என புகார் எழுந்தது.
இதை எதிர்த்து, ஆகஸ்ட் 28ல் போராட்டம் துவங்கியது. ஆகஸ்ட் 31ல் நடந்த போராட்டத்தின் போது 21 வயது ‘பைக் டாக்சி’ ஓட்டும் இளைஞர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்தார். இதையடுத்து, போராட்டம் வன்முறையாக மாறியது. அரசு கட்டடங்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.
பொது மக்கள் அதிபரின் நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்தனர். இதனால் தன் அமைச்சரவையை அதிபர் பிரபோவோ சுபியான்டோ மாற்றி அமைத்துள்ளார்.
நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி, உள்துறை அமைச்சர் புடி குணவான் உட்பட ஐந்து பேர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.