கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமமொன்றின் மீது ரஷ்யா மேற்கொண்ட விமானத் தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் யாரோவாவின் டொனெட்ஸ்க் குடியிருப்பில் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருந்த சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இந்நிலையில் டொனெட்ஸ்க் பிராந்தியத் தலைவர் வாடிம் ஃபிலாஷ்கின் கூறுகையில், சம்பவ இடத்தில் அவசர சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இத்தாக்குதலில் பலர் காயமடைந்தும் உள்ளனர். உள்ளூர் நேரப்படி 12:30 மணிக்கு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஓய்வூதியங்களை விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் உக்ரைனிய தபால் சேவை வாகனம் மோசமாக சேதமடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பான படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
யாரோவா பிராந்தியத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ஸ்லோவியன்ஸ்க்கின் வட பகுதியில் உள்ளது. ரஷ்யப் படைகள் கிழக்கில் மெதுவாக முன்னேறி வருகின்றனர். கடந்த 42 மாதங்களாக இடம்பெற்றுவரும் உக்ரைன்-ரஷ்ய போரில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்பட்ட தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.