இலங்கையில் நடந்த இனப்படுகொலை, மனித உரிமைகள் மீறல் என்பவற்றுக்கு நீதி – தீர்வு காண்பதற்கு உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று 69 புலம்பெயர் தமிழர் அமைப்புகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கோரியுள்ளன.
இது தொடர்பில் அந்த அமைப்புகள் எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
“பொறுப்புக்கூறலுக்கான ஆக்கபூர்வமான செயல்முறையை இலங்கை அரசாங்கத்திடம் வலியுத்துவதன் மூலம் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளக பொறிமுறைக்கான இடைவெளியை வழங்குவதானது, அத்தகைய உள்ளகப் பொறிமுறைகளின் நீண்டகாலத் தோல்வியின் பின்னணியில் அச்சுறுத்தலானதொரு நிலையையே தோற்றுவிக்கும்.
சுயாதீன சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றைத் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கையில் சரிவு ஏற்படவும் – தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதற்குமே வழிகோலும்.
மேலும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான உள்ளக மற்றும் கலப்பு பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கிறோம். இனவழிப்புப் பிரகடனத்தின்கீழ் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.