வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியாவில் குடியேறியுள்ளவர்களுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று லண்டனில் நடத்தப்பட்டுள்ளது.
லண்டனின் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டொம்மி ரொபின்சன் நேற்று முன்தினம் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பங்குபற்றியுள்ளனர்.
இப்பேரணியில் பங்கேற்ற ஒரு குழுவினர் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதன் விளைவாக 26 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். 24 பேர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். பேரணியின் போது அத்துமீறி செயல்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
இப்பேரணி லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டிய பிக் பென் பகுதி முதல் வாட்டர்லூ பகுதி வரை நடைபெற்றது. பேரணிக்கு ஆதரவளித்து, அதில் பங்கேற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகவும், அவர்கள் தேசிய அடையாளத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குறிப்பிட்டு கோஷம் எழுப்பினர்.
அதே நேரத்தில் டொமி ரொபின்சனின் பேரணிக்கு எதிராக ‘பாசிசத்துக்கு எதிரான பேரணி’ என்ற போராட்டத்தை இனவெறிக்கு எதிரானவர்கள் மேற்கொண்டனர். இதில் சுமார் 5,000 பேர் பங்கேற்றனர். தங்களது பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை வலதுசாரி ஆதரவாளர்கள் நெருங்காத வகையில் பொலிஸார் தடுக்க முயன்றபோது மோதல் வெடித்தது. அப்போது பொலிஸார் மீது தாக்குதல் நடந்துள்ளது. பொலிஸாரை நோக்கி போத்தல்களும் வீசப்பட்டுள்ளன.
அதன் பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸாருக்கு தலைக்கவசம் மற்றும் கவச உடைகள் வழங்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தீவிர வலதுசாரி செயல்பாட்டாளராக டொமி ரொபின்சன் அறியப்படுகிறார். இவர், தேசியவாத மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு ‘இங்கிலிஷ் டிபேன்ஸ் லீக்கை நிறுவி உள்ளார். ஐரோப்பா முழுவதும் வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்த குடியேறிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து பரவலாக பேசி வருகின்றனர். அதை முன்னிறுத்தியே டொமி ரொபின்சனின் போராட்டம் இடம்பெற்றது.