காசா மீது இஸ்ரேல் நடத்தியது இனப்படுகொலை என, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டு களாக மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், 72 பக்க அறிக்கையை நேற்று வெளியிட்டது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலை செயல்களில் நான்கை, கடந்த 2023ல் ஹமாசுடன் போர் துவங்கியதில் இருந்து இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது என்பதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன.
இஸ்ரேலிய அதிகாரிகளும், இஸ்ரேலிய படைகளும் ஒரு தேசிய, இன, மதக்குழுவிற்கு, குறிப்பாக பாலஸ்தீனியர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ஈடுபட்டும் வருகின்றனர்.
ஒரு குழுவின் உறுப்பினர்களை கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியிலான தீங்கு விளைவிப்பது, குழுவை அழிக்க வேண்டுமென்றே நிபந்தனைகளை விதிப்பது மற்றும் பிறப்புகளை தடுப்பது உள்ளிட்டவற்றில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது.
இதற்கு சான்றாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் உட்பட மூத்த இஸ்ரேல் சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கைகள் வாயிலாக அறிய முடிகிறது.
அத்துடன், பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை, காசா மீதான மொத்த முற்றுகை, பட்டினியை ஏற்படுத்தும் வகையில் மனிதாபிமான உதவிகளை தடுத்தல், சுகாதார மற்றும் கல்வி வசதிகளை திட்டமிட்டு அழித்தல் போன்றவையும் இந்நோக்கத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் அரசுதான் பொறுப்பு.
இத்தகைய இனப் படுகொலையை தடுக்கவும், பொறுப்பாளர்களை பொறுப்பேற்கச் செய்யவும் சர்வதேச சமூகம் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையம் வலியுறுத்துகிறது.
இனப்படுகொலைக்கு பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதை ஐ.நா., உறுப்பு நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும், உடனடியாக நிரந்தர போர் நிறுத்தத்தை அறிவிக்கவும், காசா மீதான முற்றுகையை நீக்கவும், தடையின்றி மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிவகை செய்யவும் அழைப்பு விடுக்கப்படுகிறது-.
இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்த இஸ்ரேல், இந்த அறிக்கை திரிக்கப்பட்டவை மற்றும் தவறானவை என தெரிவித்துள்ளது. விசாரணை ஆணையத்தின் உறுப்பினர்கள் ஹமாஸ் ஆதாரவாளர்கள் என்றும், ஹமாஸ் கூறிய பொய்களை அவர்கள் நம்பியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியது.
இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகள் ஹமாசை ஒழிப்பதற்கும், தற்காப்புக்காகவும், சர்வதேச சட்டத்தின்படியுமே காசாவில் போரை நடத்துவதாகவும் கூறியுள்ளது.