Business

சுவிற்சர்லாந்து சென்ற 12 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சுவிற்சர்லாந்தில், போர் மற்றும் இன முரண்பாடுகள் நிலவும் பல நாடுகளின் பிரதிநிதிகளை அழைத்து, சுவிஸ் அரசியல் அமைப்பு, அரசியல் யாப்பு, ஊராட்சி மன்ற முறை, மாநில அரசின் அதிகாரங்கள் மற்றும் நடுவனரசின் கூட்டாட்சி அமைப்பு போன்ற தலைப்புகளில் கற்கை உலா, வகுப்பு, பயிலரங்குகளை நடத்துவது வழக்கமாக உள்ளது.

இலங்கையில் இருந்து 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வுக்கற்கைக்காக சுவிற்சர்லாந்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அந்த வகையில் அவர்கள் பேர்னில் அமைந்துள்ள பல்சமய இல்லத்திற்கு அழைக்கப்பட்டு அங்கு எண் சமயங்கள் ஒன்றிணைந்து செயற்படும் முறையை எடுத்துக்காட்டுவது, சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றது.

17.09.2025 அன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்சமய இல்லத்திற்கு (Haus der Religionen) சென்றுள்ளனர். இந்நிகழ்வில் சைவநெறிக்கூடத்தினரும் பங்காற்றியுள்ளனர்.

சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் வேண்டுகைப்படி சுவிஸ் தமிழர்களின் கடந்தகால அனுபவங்களையும், எதிர்கால எதிர்பார்ப்புக்களையும் எடுத்துரைக்கும் உரையாடல் சைவநெறிக்கூடத்தினரால் நிகழ்த்தப்பட்டது.

சுவிஸ் அரசால் அழைக்கப்பட்ட துறைசார் மற்றும் சைவநெறிக்கூடத்தால் முன்மொழியப்பட்ட தன்னார்வ அமைப்பினரும் இதில் பங்கேற்றிருந்தனர். தொடர்ந்து செந்தமிழ் திருமறையில் வழிபாடு ஆற்றப்படும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு வருகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு சைவநெறி, இனம், மொழி, பண்பாடு, வரலாறு போன்ற பணிகள் குறித்து சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமாரால் விளக்கம் அளிக்கப்பட்டது.

பிற்பகல் பல்சமய இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சைவநெறிக்கூடத்தின் பின்னூட்டு மற்றும் வேண்டுகை பின்வருமாறு முன்வைக்கப்பட்டது.

இலங்கையில் புதிய அரசு அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் சமூக நீதி என்ற வாக்குறுதியுடன் ஆட்சியைக் கைப்பற்றினாலும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்விற்கான நடவடிக்கையினை எடுத்ததாக நாம் உணரவில்லை.

இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இன்னும் பாகுபாடுகளையும், பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்கின்றனர். சமய சுதந்திரத்தின் நடைமுறை போதுமான அளவில் செயல்படுவதாக தமிழர்கள் உணரவில்லை.

அனைத்து மதங்களையும் நிகராக (சமமாக) கையாளும் அரசின் நடுநிலையான அணுகுமுறை விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் பௌத்த-சிங்கள அடையாளத்தை வலுப்படுத்தும் அரசியல் வலியுறுத்தல்கள், பிற சமூகங்களுக்கு புறக்கணிப்பு உணர்வை ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் புதிய பௌத்த விகாரைகள் கட்டப்படுவது குறித்து அரசின் மௌனம் நீங்க வேண்டும். -செம்மணிப் பேரவலம் மனிதப் புதைகுழிகள் பற்றிய ஆய்வுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, மற்றும் இன-. மொழி-, மத பாகுபாடின்றி (பேதமின்றி) அனைவரும் பாதுகாப்பாக வாழும் சூழல் ஏற்படுத்தும் வகையில் சட்ட மாற்றங்களும் அரசின் அரசியல் தீர்வுநோக்கிய தெளிவான நிலைப்பாடும் அவசியமாகின்றன.

இந்நிகழ்வு தொடர்பாக சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் கூறியதாவது “உரையாடல் மூலம் தனிப்பட்ட அனுபவங்கள், எண்ணங்கள், உணர்வுகளை அமைதியாகப் பகிர முடிந்தது. இந்த பேச்சுவார்த்தை உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதி அல்ல, ஆனால் இடையூறு இன்றிப் பேசும் வாய்ப்பே ஒருவரின் உள்ளத்தில் வேரூன்றும் உரையாடலாக மாறும் என்ற நம்பிக்கையோடு நடந்தன.

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top