பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு உருவானது. தொடர்ந்து 7.0, 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் பதிவாகின.அப்போது அங்குள்ள போகோ, செபு ஆகிய நகரங்களில் கடும் அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகள், அலுவலகம் என பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 72 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 200 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கு விரைந்த மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக அங்கு ஏராளமான தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து மலைப்பகுதி கிராமங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலர் புதையுண்டனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட போகோ நகருக்கு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் சென்றார். அப்போது பலியானோருக்கு இரங்கலை தெரிவித்த அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் பேரிடர் மீட்பு படையினருக்கு உத்தரவிட்டார்.