ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா முதலில் கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது. சுமார் 3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைன்-ரஷியா இடையே போர்நிறுத்தம் ஏற்படாமல் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.
இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. அதே சமயம் ரஷியாவுக்கு வடகொரியா அரசு ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஷியாவுடன் வர்த்தக தொடர்பில் உள்ள இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில் உக்ரைனின் பல பகுதிகள் மீது ரஷிய ராணுவம் தொடர்ந்து டிரோன் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக செர்னோபில் மற்றும் சபோரியா அணுமின் நிலையங்களுக்கு அருகே ரஷிய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த 2 அணுமின் நிலையங்களும் தற்போது செயல்பாட்டில் இல்லா. ஆனாலும், அந்த நிலையங்களில் உள்ள எரிபொருள் கட்டமைப்புகள் தொடர்ந்து குளிர்விக்கப்பட வேண்டும். இதற்காக அந்த அணுமின் நிலையங்களுக்கு தொடர்ந்து மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ரஷியாவின் டிரோன் தாக்குதல் காரணமாக 2 அணுமின் நிலையங்களுக்கும் மின்சார இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷியாவின் டிரோன் தாக்குதல்களால் உக்ரைனில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ரஷியா வேண்டுமென்றே கதிர்வீச்சு அச்சுறுத்தலை உருவாக்குகிறது. உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது, குறிப்பாக அணுமின் நிலையங்களை குறிவைத்து ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இது ஒரு சர்வதேச அச்சுறுத்தலாகும். இதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.