ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பை ஒத்திவைத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ‘அவருடன் பேசுவதால் எந்த பயனும் இல்லை’ என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 2022 பிப்ரவரியில் போர் துவங்கியது. நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், இன்று வரை நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
ரஷ்ய அதிபர் புடினை அலாஸ்காவில் நேரில் சந்தித்து பேச்சு நடத்தினார். ஆனால் இதுவரை எதுவும் பயனளிக்கவில்லை; தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் புடபெஸ்டில் புடின் – டிரம்ப் சந்திப்பு நடக்க இருந்தது. அது ஒத்திவைக்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்யா உடனடி போர் நிறுத்தத்திற்கு எதிராக இருப்பதாக தெரிவித்தார்.
புடினுடனான சந்திப்பை ஒத்திவைத்தது குறித்து அதிபர் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது கூறுகையில், “நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. பயனற்ற சந்திப்பை நடத்த விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,” என்றார்.