சுவிட்சர்லாந்தின் சோஷலிச சனநாயகக் கட்சியின் (SP) பொதுக்கூட்டத்தில் (Parteitag 25.10.2025) ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி விவாதிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் வெளியான அறிக்கையில், “எமது ஈழத்தமிழர்களின் வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்டது, என்றைக்கும் அது மறைக்கப்பட வேண்டியதல்ல – நீதிக்கு வழிகாட்ட வேண்டியது. அதற்காகவே இந்த கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
2009ம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களையும் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையையும் சர்வதேச நாடுகள் பார்த்தும், பேச மறுக்கும் கொடூரங்களாகவே உள்ளன.
16 வருடங்களாகியும் இன்றுவரை எமது மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை என்பதே கவலைக்குரிய உண்மை. ஆகவே, இந்த வலியை தினமும் மனதில் சுமந்து வாழும் நாம் இனியும் மௌனமாய் இருக்கக் கூடாது.
எங்கள் குரல் சர்வதேச அரங்கில் ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சுவிட்சர்லாந்தின் சோஷலிச சனநாயகக் கட்சியின் (SP) அடுத்த பொதுக்கூட்டத்தில் (Parteitag 25/10/2025) விவாதிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய தீர்மானத்தை, எங்கள் குழு அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளது.
இத்தீர்மானம் மனித உரிமைகள் மற்றும் நீதி என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, 2009ம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக இடம்பெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுவிட்சர்லாந்து அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
மேலும், அந்த நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.



