கனடாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், சீக்கிய தொழிலதிபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடா வின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள அபாட்ஸ்போர் ட்டில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் சிங் சஹ்சி, 68. பஞ்சாப் மாநிலம் லுாதியானா மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷன், 1991ல் கனடாவிற்கு குடியேறி சிறு, சிறு தொழில்களாக செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தர்ஷன் சிங் சஹ்சி, அவரது வீட்டில் இருந்து அலுவலகத்திற்குச் செல்ல காரில் ஏற முயன்றார். அப்போது மற்றொரு காரில் இருந்த நபர், அவரை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் தர்ஷன் சிங்கின் உடலை மீட்டு, கொலையாளியை தேடி வருகின்றனர். இந்தக் கொலைக்கு, தொழில் போட்டியா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
