மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், படுகொலை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியானது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நைஜீரிய அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
நைஜீரிய அரசாங்கம் கிறிஸ்தவர்களைக் கொல்வதைத் தொடர்ந்து அனுமதித்தால், அமெரிக்கா உடனடியாக நைஜீரியாவுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தும். மேலும் இந்த கொடூரமான அட்டூழியங்களைச் செய்யபவர்களை, முற்றிலுமாக அழிக்க அந்த நாட்டிற்குள் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சாத்தியமான நடவடிக்கைக்குத் தயாராகுமாறு நமது போர்த் துறைக்கு நான் இதன் மூலம் அறிவுறுத்துகிறேன் என்றார். சமீபத்தில் நைஜீரியாவை கவலைக்குரிய நாடு பட்டியலில் சேர்த்து டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போகோ ஹார்ம் (Boko Haram) போன்ற பயங்கரவாத குழுக்கள் பல ஆண்டுகளாக அந்நாட்டில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அவர்களால் அனைத்து மதத்தினருக்கும் பாதிப்புதான் என நைஜீரியா கூறுகிறது.
