News

பிலிப்பைன்ஸ் – கனடா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

 

வட அமெரிக்க நாடான கனடா – கிழக்காசிய நாடான பிலிப்பைன்ஸ் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் அத்துமீறலை தடுக்கவும் பாதுகாப்பு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

அத்துமீறல் இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்த, கனடாவின் ராணுவ அமைச்சர் டேவிட் மெக்வின்டி அரசு முறை பயணமாக பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். அந்நாட்டு தலைநகர் மணிலாவில் உள்ள மகாதி சிட்டியில், இருதரப்பு ராணுவ அமைச்சர்கள் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் டேவிட் மெக்வின்டியும், பிலிப்பைன்ஸ் ராணுவ அமைச்சர் கில்பெர்டோ தியோடோரோ ஜூனியரும் பங்கேற்று, இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம், வி.எப்.ஏ., எனும் ‘விசிட்டிங் போர்ஸ் அக்ரிமென்ட்’ என அழைக்கப்படுகிறது. இதன்படி தேவைப்படும்போது, ஒரு நாட்டுக்கு உதவுவதற்காக மற்றொரு நாடு தன் ராணுவத்தை அனுப்பி வைக்கும்.

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் ஒரு மைல்கல் என்று இரு அமைச்சர்களும் தெரிவித்தனர்.

தென் சீனக் கடலில் உள்ள பிலிப்பைன்சின் பிரத்யேக பொருளாதார மண்டலமான மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில், தொடர்ந்து சீன கடலோர காவல்படை கப்பல்கள் அத்துமீறி வருகின்றன. இதற்கு பதிலடி வழங்கும் வகையில், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் தற்போது கனடாவும் இணைந்துள்ளது.

ஒத்துழைப்பு ஏற்கனவே, கனடாவின் செயற்கைக்கோள் தொழில்நுட்பமான ‘டார்க் வெஸ்ஸல் டிடெக்ஷன் சிஸ்டத்தை’ பிலிப்பைன்ஸ் பயன்படுத்தி, அதன் கடல் பகுதியில் அத்துமீறும் படகுகளை கண்டறிந்து வருகிறது. தற்போதைய புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தால் ராணுவ ஒத்துழைப்பு மேலும் ஆழப்படும் என கூறப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top