பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
வழமையாக அதிக எண்ணிக்கையிலான வழக்குரைஞர்கள் கூடும் இஸ்லாமாபாத்திலுள்ள மாவட்ட நீதிமன்றத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய அரச அலுவலகங்கள் பல அமைந்துள்ள நகரத்தின் பரபரப்பான நீதித்துறை வளாகத்தின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இவ்வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இப்பகுதிக்குள் பிரவேசிக்கவும் ெவளி யேறவும் அதிஉயர் பாதுகாப்பு ஏற்பாடுகளின் மேற்கொள்ளப்பட்டிருந்த சமயமே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஸெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைத்து பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு இஸ்லாமாபாத்திலும் பாகிஸ்தான் இலங்கை கிரிகெட் அணியினர் ராவல் பிண்டியில் ஒருநாள் போட்டித் தொடரில் ஈடுபட்டுள்ள சமயம் இக் குண்டு வெடிப்பு இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றுள்ளது.
குண்டு வெடிப்புக்கு எவரும் உடனடியாக உரிமை கோரவில்லை. ஆனால் இது போன்ற குண்டுவெடிப்புகளை பாகிஸ்தான் தலிபான் உள்ளிட்ட ஆயுதமேந்திய குழுக்கள் ஏற்கனவே நடத்தியுள்ளமை தெரிந்ததே. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வனாவில் உள்ள கெடட் கல்லூரியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததை பாதுகாப்புப் படையினர் முறியடித்த சில மணித்தியாலயங்களில் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது
