Canada

பேருந்தைக் கடத்திய கனேடியர்: அடுத்து செய்த ஆச்சரிய செயல்

கனடாவில் பேருந்து ஒன்றைக் கடத்திய நபர் செய்த செயல் வியப்பை உருவாக்கியுள்ளது.

செவ்வாயன்று இரவு 9.00 மணியளவில் ஹாமில்ட்டனில் பேருந்தொன்றை நிறுத்திய அதன் சாரதி தேநீர் அருந்தச் சென்றுள்ளார்.

திடீரென பேருந்து புறப்பட்டுள்ளது. பேருந்தில் 10 பயணிகள் இருக்க, யாரோ ஒரு நபர் பேருந்தை இயக்கத் துவங்கியுள்ளார்.

தகவலறிந்த பொலிசார், அந்த நபர் பேருந்தைக் கடத்திச் செல்வதை உணர்ந்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி அமைதியாக அந்த பேருந்தை பின்தொடர்ந்துள்ளனர்.

விடயம் என்னவென்றால், அந்த நபர் பேருந்தைக் கடத்தி எங்கோ எடுத்துச் செல்லாமல், முறையாக ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டும், இறக்கிவிட்டுக்கொண்டும் செல்வதைக் கண்ட பொலிசார் திகைப்படைந்துள்ளனர்.

அத்துடன், அந்த நபருக்கு பேருந்து செல்லும் வழி சரியாகத் தெரியாததால் சில பயணிகளின் உதவியை நாடியுள்ளார். அவர்கள் வழி சொல்ல, இவர் பேருந்தை இயக்கியுள்ளார்.

சுமார் நான்கு மைல் தூரம் சென்றபின் பேருந்து ஓரிடத்தில் நிற்க, பொலிசார் சென்று அவரைக் கைது செய்துள்ளார்கள்.

அவரது பெயர், புகைப்படம் முதலான விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை. பேருந்தைக் கடத்திய நபருக்கு மன நல பிரச்சினைகள் இருக்கக்கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top