ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் பொலிஸ் நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் திடீரென்று வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் செங்கோட்டை பகுதியில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் மற்றும் உத்தர பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனைகள் மேற்கொண்டு பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையம் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது.
ஜம்மு காஷ்மீர் உள்பட பல மாநிலங்களில் பயங்கரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் இந்த பொலிஸ் நிலையம் மிகவும் முக்கிய பங்கு வகித்தது.

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி உமரின் கூட்டாளிகளை கைது செய்து அம்மோனியம் நைட்ரேட் உள்பட பல்வேறு வகையான வெடிபொருட்களை இந்த பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.
இந்த வெடிபொருட்கள் அனைத்தும் நவ்காம் பொலிஸ் நிலையத்தின் தனிஅறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் நள்ளிரவில் திடீரென்று வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தீப்பிழம்பு பல அடி உயரம் வரை சென்றது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் பதற்றத்துக்கு உள்ளாகினர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், மேலதிக பொலிசார், இராணுவத்தினர் உடனடியாக பொலிஸ் நிலையம் விரைந்தனர். தீயில் சிக்கி படுகாயமடைந்திருந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வெடிபொருட்களை சோதனை செய்து கொண்டிருந்த பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
