மத்திய தரைக்கடலை அண்மித்தபடி அமைந்துள்ள பலஸ்தீனின் ஒரு பகுதி தான் காசாவாகும். 365 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட இப்பகுதியில் 23 இலட்சம் மக்கள் உள்ளனர். என்றாலும் 2023 ஒக்டோபர் 07 இல் ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதற்காகவும் பணயக் கைதிகளை மீட்பதற்காகவும் எனக்கூறி இஸ்ரேல் முன்னெடுத்த போர், இரு வருடங்கள் நீடித்தது. ஆன போதிலும் இப்போர் முடிவுறாது என்பதை உணர்ந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20 அம்சத்திட்டத்தை முன்வைத்து சர்வதேச மத்தியஸ்தர்கள் ஊடாக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் யுத்தம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
ஆனாலும் இஸ்ரேல் இப்போரை எவ்வாறு முன்னெடுத்தது என்பது குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தத் தகவல்களின்படி, காசா மீதான போரை இஸ்ரேல் தனித்து நின்று முன்னெடுக்கவில்லை என்பது தெளிவாகிறது. அமெரிக்கா வெளிப்படையாக இஸ்ரேலுக்கு உதவி ஒத்துழைப்புக்களை அளிக்கின்ற போதிலும், 60 இற்கும் மேற்பட்ட நாடுகளின் உதவி, ஒத்துழைப்புக்களும் காசா மீதான யுத்தத்திற்கு இஸ்ரேலுக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன பிரதேசங்களது மனித உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் இந்த அதிர்ச்சிகரத் தகவலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
‘காசா இனப்படுகொலை: ஒரு கூட்டுக் குற்றம்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தான் காசா யுத்தத்திற்கு 60 இற்கும் மேற்பட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு உடந்தையாக இருந்துள்ளன என்ற விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், காசா மற்றும் மேற்குக்கரையில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அந்நாடுகளின் பங்களிப்புக்களையும் ஆராய்ந்துள்ளார்.
யுத்தம் என்பது அழிவுகளையும் இழப்புக்களையும் ஏற்படுத்தக்கூடியவை. அதில் பொருளதாதார இழப்பு பிரதான அம்சமாக இருக்கும். அதனால் பெரும்பாலான நாடுகள் பிரச்சினைகள், நெருக்கடிகளைப் பேச்சுவார்த்தைகளை மூலமே தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யும். யுத்தத்தை தவிர்த்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தும்.
ஆனால் இஸ்ரேல் இதற்கு மாற்றமாக, யுத்தத்தில் ஆர்வமாக இருந்து வந்தது. பொருளாதார இழப்புக்கள் குறித்து அது கவனம் செலுத்தவில்லை. பொருளாதார நிபுணர்கள் கூட இஸ்ரேலின் இந்நிலைப்பாட்டை ஆச்சரியத்துடன் நோக்கின.
ஆனால் இழப்புக்கள் குறித்து கவனம் செலுத்தாது இஸ்ரேல் யுத்தத்தில் முனைப்பு காட்டியதன் பின்னணி இப்போது தான் வெளிச்சத்திற்கு வருகின்றது. யுத்தத்திற்கு தேவையான உதவி ஒத்துழைப்புக்களை அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளும் போதியளவில் அளிக்கும் போது இஸ்ரேல் ஏன் இழப்புக்கள் குறித்து கவலைப்பட வேண்டும். அது தான் கடந்த 2 வருடங்களாக நடந்திருக்கிறது
இத்தாலியின் சட்டத்துறை அறிஞரும் மனித உரிமைகள் தொடர்பான நிபுணருமான அல் பானீஸ், காசா யுத்தத்தை கடுமையாக எதிர்த்து வருபவர்.அந்த மக்களுக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறார். அதனால் பலஸ்தீன பிரதேசங்களுக்கு செல்வதற்கும் இஸ்ரேல் அவருக்கு தடை விதித்திருக்கிறது.
அவரது அந்த அறிக்கையில், ‘பலஸ்தீனியர்களை மனிதாபிமானமற்றவர்களாகச் சித்தரிக்கும் ஒரு காலனித்துவக் கண்ணோட்டத்தின் மூலம் இஸ்ரேல் முன்னெடுத்த பாரிய மனித உரிமை மீறல்கள் அணுகப்பட்டுள்ளன. அதன் பயனாக இத்தகைய நாடுகளிடமிருந்து நேரடி ஆதரவு, பொருள்சார் உதவிகள், இராஜதந்திர ரீதியிலான பாதுகாப்பு மற்றும் சில சமயங்களில் செயலூக்கமான பங்களிப்பையும் இஸ்ரேல் பெற்றது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு இல்லையெனில், காசாவில் இஸ்ரேலால் தனது யுத்தத்தை தொடர்ந்திருக்க முடியாது.
காசா மீதான கொடூர யுத்தத்திற்கு இராஜதந்திரப் பாதுகாப்பு அளிப்பதற்காகவும், போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா ஏழு தடவைகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியது. இப்போரில் அமெரிக்கா தனித்துச் செயல்படவில்லை. இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காத நிலை, இடைமறிப்புகள், தீர்மானங்களின் தீவிரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் ஆகியவை இச்செயலுக்குத் துணைபுரிந்தன’ என்றும் ‘இஸ்ரேலின் ஆயுத இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கை அமெரிக்கா மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் பல நாடுகள் தொடர்ந்தும் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி வந்ததோடு பலஸ்தீனில் பரீட்சிப்புக்கான களத்தொழில்நுட்பங்களையும் வழங்கின என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்தோடு இஸ்ரேலின் ஏற்றுமதிகள் இப்போர் இடம்பெற்ற இரண்டு ஆண்டுகளில் 474 பில்லியன் டொலர்களாக உயர்ந்து அதன் போர் பொருளாதாரத்தை ஊக்குவித்தது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இஸ்ரேலின் ஏற்றுமதிகள் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது,
இஸ்ரேல் தயாரிக்கும் ஆயுதங்களையும் இராணுவத் தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து கொள்வனவு செய்யும் நாடுகளும் இருக்கவே செய்கின்றன. இவை ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பலஸ்தீனியர்கள் மீது சோதனை செய்து பார்க்கப்பட்டவையாகும்.
மேலும் காசாவில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் எப் 35 யுத்த விமானங்களுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் மற்றும் உபகரணங்களை விநியோகம் செய்வதில் 19 நாடுகள் சம்பந்தப்பட்டுள்ளன. இதில் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தை அங்கீகரித்த 17 நாடுகளும் அடங்கும். யுத்த விமானங்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட எரிபொருள் கலவையை அமெரிக்கா மாத்திரமே வழங்கியது. அத்தகைய எரிபொருளை கடந்த இரு வருட காலப்பகுதியில் 03 இலட்சத்து 60 ஆயிரம் தொன் அமெரிக்கா ஏற்றுமதி செய்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது அந்த அறிக்கை.
அதேவேளை இத்தாலி, நெதர்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், மொரோக்கோ போன்ற நாடுகள் தங்கள் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஊடாக இஸ்ரேலுக்கு ஆயுதங்களைப் பரிமாற்றம் செய்ய அனுமதித்தன. இதில் முஸ்லிம் நாடான மொராக்கோவும் அடங்கியுள்ளது. எனினும், ஸ்பெயினும் ஸ்லோவேனியாவும் அந்த ஒப்பந்தங்களை இரத்து செய்து, ஆயுத ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளன. மேலும் இஸ்ரேலிய இராணுவத்தில் சேவை செய்த அமெரிக்க, ரஷ்ய, பிரான்ஸ், உக்ரைன், பிரித்தானிய குடிமக்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், காசாவில் அவர்கள் செய்த போர்க் குற்றங்களுக்காக அவர்கள் மீது விசாரணையோ அல்லது சட்ட நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நிவ்யோர்க்கில் இருந்த ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றிய அல்பானீஸ், உலகளாவிய இராணுவ மற்றும் பொருளாதார உறவுகள் காசாவில் இஸ்ரேல் யுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க உதவியுள்ளன. மேற்குலக நாடுகள் வழங்கிய இராஜதந்திரப் பாதுகாப்பும், சர்வதேசச் சட்டங்களை மீறும் இஸ்ரேலைத் தண்டிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்த போக்குமே இப்போரைத் தொடர இஸ்ரேலுக்கு உந்துசக்தியாக அமைந்தன.
மேற்கத்திய நாடுகள் இராணுவ ஒத்துழைப்பு, ஆயுத விற்பனை மற்றும் உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இஸ்ரேல் காசா யுத்தத்தை முன்னெடுத்தது. இதன் ஊடாக, காசாவின் கழுத்து நெரிக்கப்பட்டு பட்டினியால் நொறுக்கப்பட்டுள்ளது. அதனால் இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக மற்றும் இராணுவ ஒப்பந்தங்களையும் இடைநிறுத்துமாறு அரசாங்கங்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை ஐ.நா.வின் மற்றொரு உயரதிகாரியான காசா மீதான ஐ.நா. விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் நவி பிள்ளை உரையாற்றுகையில், ‘காசா மீது நிரந்தர இராணுவக் கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் தெளிவான மற்றும் நிலையான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக நாடுகடத்தல், குடியேற்ற கட்டுமானம் மற்றும் இணைப்புக்கான திட்டங்களை அவர்கள் பகிரங்கமாக ஆதரித்துள்ளனர் என்றுள்ளார்.
இந்த சூழலில் ‘ஒயில் சேஞ்ச் இன்டர்நேஷனல்’ நிறுவனம் ‘பீப்பாய்க்குப் பின்னால்…’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், காசா மீதான இஸ்ரேலின் போருக்கு கடந்த 02 ஆண்டுகளில் 25 நாடுகள் 21.2 மில்லியன் தொன் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களை 323 கப்பல்களில் வழங்கியுள்ளன. அவற்றில் யுத்த விமானங்களுக்குரிய எரிபொருளும் அடங்கும். அசர்பைஜான், கசகஸ்தான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை இவற்றின் பிரதான விநியோகஸ்தர்களாக இருந்தன. அசர்பைஜானின் மசகு எண்ணெய் குழாய் வழியாக துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து டெங்கர்கள் மூலம் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரேசிலில் அண்மையில் நடைபெற்ற சி.ஒ.பி 30 ஐ.நா. காலநிலை உச்சிமாநாட்டின் போது வெளியிடப்பட்ட அறிக்கையில், அசர்பைஜான் துருக்கி வழியாகவும், கசகஸ்தான் ரஷ்யா வழியாகவும் சுமார் 70 சதவீத மசகு எண்ணெயை இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் மிகப்பெரிய விநியோகஸ்தராக ரஷ்யா இருந்தாகவும், இது மொத்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்ப் பொருட்களில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரேசிலின் மசகு எண்ணெய் இஸ்ரேலுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டதாக தோன்றினாலும், சார்டினியாவில் உள்ள இத்தாலியின் சரோச் சுத்திகரிப்பு நிலையம் வழியாக அதன் மசகு எண்ணெய் மறைமுகமாக இஸ்ரேலை அடைந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு மேலதிகமாக அரபு நாடுகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
‘காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது’ என்று ஐ.நா. வின் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்துள்ளது என்று ஐ.நா. முடிவு செய்த பிறகும், சில நாடுகள் இஸ்ரேலுக்கு புதைபடிவ எரிபொருட்களை தொடர்ந்து அனுப்பியுள்ளன என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளன.
ஆக காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கு உலகின் பல நாடுகளும் குறிப்பாக ஆயுத உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் உடந்தையாக இருந்திருக்கின்றார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை எனலாம்.
