இலங்கை உட்பட உலகெங்கிலும் இருந்து சபரிமலைக்கு செல்லும் இலட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு கேரள மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அங்கு பரவி வரும் அமீபா மூளைக்காய்ச்சலை கவனத்திற் கொண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கேரள மாநில சுகாதாரத்துறை பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கேரளாவில் அமீபா மூளைக் காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணமடைந்துள்ள நிலையிலேயே மேற்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. கேரளாவில் அமீபா மூளைக் காய்ச்சல் பாதிப்புகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பருவம் இன்று ஆரம்பமாவதுடன் அந்த வழிபாடுகள் ஜனவரி மாதம் 20ஆம் திகதி வரை 65 நாட்கள் நடைபெறவுள்ளன. அதனை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக அங்கு வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் சபை வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கேரள மாநில சுகாதாரத்துறை பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளைக் காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியவாறு குளிக்க வேண்டும் என்றும், குளிக்கப் பயன்படுத்திய உடைகளை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தைத் துடைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, பக்தர்கள் கண்டிப்பாக கொதித்த நீரையே அருந்த வேண்டும் என்றும், சபரிமலை உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளிகளில் மலம் கழிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுகாதாரமான கழிப்பறைகளை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
