நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு எதிரான தாக்குதல்கள், கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதில், சில குழுக்கள் அங்குள்ள வெளிநாட்டினரையும், பாடசாலைப் பிள்ளைகளையும் கடத்தி பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கெப்பி மாநிலத்தின் உயர்நிலை பாடசாலை விடுதியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலையில் சுமார் 25 மாணவிகளை ஆயுதம் ஏந்திய குழுவொன்று கடத்தி சென்றுள்ளது. இச்சமயம் பாடசாலை மீது தாக்குதல் நடத்திய கடத்தல்காரர்கள் அங்குள்ள பாதுகாவலரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடத்தல்காரர்களால் ஆசிரியர் ஒருவரும் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இக்கடத்தலுக்கு நைஜீரியாவில் செயல்படும் போகோ ஹராம் உள்ளிட்ட எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சம்பவ இடத்துக்கு விரைந்த நைஜீரிய பாதுகாப்புப் படையினர் அருகிலுள்ள காடுகள் உள்ளிட்ட பதுங்குமிடங்களில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
