News

காசாவில் போர் நிறுத்தத்திலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் உக்கிரம்: 34 பேர் உயிரிழப்பு

 

காசாவில் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேல் கடந்த புதன்கிழமை (19) தொடக்கம் நடத்தி வரும் பயங்கரத் தாக்குதல்களில் 18 சிறுவர்கள் உட்பட 34 பலஸ்தீனர்கள கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காசா நகரான கான் யூனிஸ், ரபா மற்றும் காசா நகரங்களிலேயே இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் இடம்பெற்ற தீவிர தாக்குதல்களில் ஒன்றாக இந்த வன்முறைகள் உள்ளன. லெபனானிலும் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையிலேயே காசாவிலும் போர் நிறுத்த மீறல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் கான் யூனிஸின் கிழக்காக பானி சுஹைல் சிறு நகரில் குடியிருப்புக் கட்டம் ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் குண்டுகளை வீசிய நிலையில் இடிபாடுகளில் இருந்து மூன்று சிறுவர்கள் மீட்கப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்பு அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

காசா நகரின் கிழக்கே சலாஹ் அல் தீனில் சுஜையா சந்திக்கு அருகே பொதுமக்கள் குழு ஒன்றின் மீது இஸ்ரேல் போர் விமானம் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

காசா நகரின் தெற்கே அஸ்குலா பகுதிக்கு அருகில் உள்ள வக்ஃப் அமைச்சு கட்டடத்தின் மீது இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதலில் இரு பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் உட்பட பத்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்த செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

கான் யூனிஸின் மேற்கே இஸ்ரேலிய படையின் தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், கிழக்கு காசாவின் சுஜையா பகுதியில் பல்புல் குடும்பத்திற்குச் சொந்தமான வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதல்களில் மற்றொரு பலஸ்தீனர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கான் யூனிஸில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 18இற்கு அதிகமானவர்கள் காயமடைந்ததாக உள்ளூர் சுகாதார நிர்வாகம் தெரிவித்தது. இதில் பானி சுஹைலாவில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் குழந்தை ஒன்று உட்பட மூவர் கொல்லப்பட்டிருப்பதோடு அருகாமையில் உள்ள அபசான் நகரில் இடம்பெற்ற பிறிதொரு தாக்குதலில் மேலும் ஒரு பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனார்.

ஹமாஸ் உறுப்பினர்கள் துருப்புகள் மீது சூடு நடத்தியதற்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதனை மறுத்திருக்கும் ஹமாஸ், இஸ்ரேல் படைகளால் தினசரி மீறப்பட்டு வரும் இந்த போர் நிறுத்தத்தை சீர்குலைக்கும் ‘ஆபத்தான தாக்குதல்களாக’ இதனை வர்ணித்துள்ளது.

ஓர் ஆண்டுக்கு முன்னர் தெற்கு காசாவுக்கு இடம்பெயர்ந்த நிலையில் தனது குடுபத்துடன் காசாவில் உள்ள வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திரும்பிய 50 வயது அஷ்ரப் அபூ சுல்தான், ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது,

‘இங்கு குடியிருப்பதற்கு தயாரிக்கும் வகையில் அழிக்கப்பட்ட எமது வீட்டின் ஓர் அறையை சீரமைத்து முடித்தது தான் தாமதம் குண்டு வீச்சுகளும் உயிரிழப்புகளும் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. அவர்கள் மூச்சு விடக் கூட வாய்ப்பு அளிப்பதில்லை’ என்றார்.

காசாவில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி எட்டப்பட்ட போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இஸ்ரேல் அதனை தினசரி மீறி வருகிறது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா தொடர்பான தீர்மானம் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட சூழலிலேயே இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

காசாவில் சர்வதேச படை ஒன்றை நிலைநிறுத்துவது மற்றும் அங்கு நிலைமாற்று அரசு ஒன்றை அமைப்பது தொடர்பான இந்தத் தீர்மானத்திற்கு ஹமாஸ் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததோடு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை வரவேற்றிருந்தார்.

புதன்கிழமை சூரியோதயத்தை அடுத்து காசா நகர் மற்றும் கான் யூனிஸில் பல இடங்களில் வான், ஆளில்லா விமானம் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் பி.பி.சி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் என்றும் போர் நிறுத்தத்தை செயற்படுத்துவதற்கும் தாக்குதல்களை நிறுத்துவதற்கும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஹமாஸ் அமைப்பே போர் நிறுத்தத்தை சிதைப்பதற்கு முயற்சிப்பதாகவும் ஆயுதங்களை களையும் உறுதி மொழியை நிறைவேற்றத் தவறுவதாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 312 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 760 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top