சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்திற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு தெரிவிப்பதால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி மேலும் தடைக்குள்ளாக்கப்படுவதாக சட்டத்தரணி அச்சலா செனவிரத்தின தெரிவித்துள்ளார்.
தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளின் சட்டத்தரணியான அச்சலா செனவிரத்தின இன்று (21.11.2025) நடத்திய ஊடக மாநாட்டில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகம் அமைப்பதை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் அதிகாரப்பூர்வமாக எதிர்த்துள்ளது.
நாட்டில் சட்டம் இயற்றும் உச்ச நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்பாகவும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இசைந்து செயற்படுவதே நியதியாகும்.ஆனால் சட்ட மா அதிபர் திணைக்களம் அதற்கு எதிராக செயற்படுகிறது.
நாட்டில் நீதி சரியான முறையில் செயற்படாமல் இருந்த காலத்தில் தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தால் சாதாரண மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படுவதில் காணப்பட்ட தெளிவின்மையாலே சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்தை அமைக்க அசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்தது.
யார் கோபம் கொண்டாலும் பரவாயில்லை என்று மக்களின் நீதி நிலைநாட்டப்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கோள்கிறோம் என்றார்.
