கருங்கடலில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் எச்சரிக்கை விடுப்பதாகவும் எர்டோகன் குறிப்பிட்டுள்ளார். துருக்கியின் வடக்கு கடற்பகுதியில் ட்ரோன் படகு ஒன்று எண்ணெய் கப்பல் மீது மோதிய சம்பவத்தை அடுத்தே எர்டோகனின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தற்போது கருங்கடலில் கடல்வழிப் பாதுகாப்பை மிக மோசமாக அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது என செய்தியாளர்களிடம் விளக்கியுள்ள எர்டோகன்,
வெள்ளிக்கிழமை தங்களின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் கப்பல்கள் குறிவைக்கப்பட்டுள்ளது கவலையளிக்கும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது என்றார்.
மேலும், இந்தத் தாக்குதல்களை நாங்கள் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து அனைத்து தொடர்புடைய தரப்பினருக்கும் தேவையான எச்சரிக்கைகளை நாங்கள் தெரிவித்து வருகிறோம் என்றார்.
ரஷ்யாவின் ரகசிய எண்ணெய் கப்பல்களில் ஒன்றான விராட், துருக்கியின் கருங்கடல் கடற்கரையிலிருந்து சுமார் 35 மைல் தொலைவில் ட்ரோன் படகு மூலம் தாக்கப்பட்டதாக துருக்கி சனிக்கிழமை தெரிவித்திருந்தது.
ஆனால், குறித்த தாக்குதலின் பின்னணியில் யார் செயல்பட்டார்கள் என்பது உறுதி செய்யப்படாத நிலையில், அதில் உக்ரைன் ஈடுபட்டிருக்கலாம் என்றே வெளியான தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், உக்ரைன் இதுவரை குறித்த தாக்குதலை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
