மனிதாபிமான உதவிகளுடன் மேலும் இரண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானங்கள் இலங்கை வருகை தந்துள்ளன.
நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் இரண்டு மனிதாபிமான உதவி விமானங்கள் இலங்கையை வந்தடைந்தன.
இந்தநிலையில், நேற்று (02) குறித்த விமானங்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

C-17 விமானங்களில் இரண்டு மீட்புப் படகுகள், தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நான்கு K9 வகை நாய்கள், டபிள் கெப் மற்றும் SUV உள்ளிட்ட மீட்பு வாகனங்கள், லொரிகள் மற்றும் 53 பணியாளர்களைக் கொண்ட விசேட நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்புக் (USAR) குழு உள்ளிட்ட அத்தியாவசிய அனர்த்த மீட்பு உபகரணங்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.
கொழும்பிற்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் கௌரவ கலீத் நாசர் அல்அமேரி மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய நிவாரணக் குழுவின் தலைவர் கலாநிதி ஹமூத் அலபாரி ஆகியோரால் இந்த உதவிப் பொருள் இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மத்திய கிழக்குப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர்களான இஷாரா டி சில்வா மற்றும் தினுஷிகா தசநாயக்க ஆகியோர் இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றனர்.
இந்த நெருக்கடியான நேரத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் வழங்கிய அவசர ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
