News

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது; எச்சரிக்கிறார் நெதன்யாகு

 

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் இரு குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை மையமாகக் கொண்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையிலான போர் நடந்து வருகிறது. 2 ஆண்டுகளை கடந்துள்ள இந்தப் போரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டினால் இரு தரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதாகக் கூறி, ஹமாஸ் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனிடையே, ராபா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 5 ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.

இந்த நிலையில், ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக, நேற்று நள்ளிரவில் காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில், இரு குழந்தைகள், இரு பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எங்கள் படைகளுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எங்கள் கொள்கை தெளிவானது. இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்களைத் தாக்குவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அதற்கேற்ற பதிலடி இருக்கும். இன்று ராபாவில் நடந்த தாக்குதலில் காயமடைந்த நம் வீரர்களுக்கு விரைந்து குணமடைய வேண்டுகிறேன்,’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top