News

இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் ஹமாஸ் மூத்த தளபதி படுகொலை

 

 

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸின் முன்னணி தலைவர் ஒருவரான ரயீத் சாத் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட உயர் மட்ட தலைவர் ஒருவராக இவர் உள்ளார்.

காசா நகருக்கு அருகே சாத்தை படுகொலை செய்ததாக இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை (13) கூறியது. காசாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதலில் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பு நேற்று வெளியிட்ட வீடியோ அறிவிப்பு ஒன்றின் மூலம் சாத் கொல்லப்பட்டதை உறுதி செய்தது. கடந்த ஒக்டோபரில் எட்டப்பட்ட போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மீறி இருப்பதாக ஹமாஸின் காசா தலைவர் கலீல் அல் ஹய்யா குற்றம்சாட்டினார்.

‘ஹமாஸ் தளபதியின் தற்போதைய படுகொலை உட்பட இஸ்ரேலின் தொடர்ச்சியான வன்முறைகளுக்கு மத்தியில் போர் நிறுத்தத்தில் பிரதான உத்தரவாதம் அளிப்பவர்களான அமெரிக்க நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மத்தியஸ்தர்கள் போர் நிறுத்தத்தை மதிப்பதற்கும் அதனை கடைப்பிடிப்பதற்கு இஸ்ரேலுக்கு அழுத்தல் கொடுக்க நாம் அழைப்பு விடுக்கிறோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டு போரினால் பலவீனம் அடைந்திருக்கும் ஹமாஸின் திறனை மீள கட்டியெழுப்பும் செயற்பாட்டில் சாத் ஈடுபட்டு வந்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. காசாவில் போர் வெடிப்பதற்கு காரணமான 2023 ஒக்டோபரில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் மூளையாக செயற்பட்டார் எனவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

ஹமாஸ் ஆயுதப் பிரிவில் இஸ் அல் தீன் அல் ஹதாதுக்கு அடுத்து சாத் அதன் இரண்டாம் நிலை தலைவராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.

கடந்த சனிக்கிழமை காசா நகரில் கார் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டு குறைந்தது 25 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார நிர்வாகம் முன்னதாக கூறியது. எனினும் இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சாத் இருந்தார் என்பதை ஹமாஸ் அல்லது மருத்துவ வட்டாரங்கள் உறுதி செய்யவில்லை.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதோடு, அதன் போர் நிறுத்த மீறல் எண்ணிக்கை 800ஐ தாண்டி உள்ளது. இதனால் போர் நிறுத்த காலத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 391 ஆக அதிகரித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவில் நேற்றும் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தொடர்ந்த நிலையில் தெற்கு காசாவின் ரபா மற்றும் கான் யூனிஸில் வான் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதோடு இராணுவ வாகனங்களும் சூடு நடத்தியுள்ளன. கான் யூனிஸின் கடற்கரையில் இஸ்ரேலின் கடற்படை கப்பல்களும் கூடு நடத்தி இருப்பதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தவிர, காசாவுக்கான உதவிகள் செல்வதையும் இஸ்ரேல் மறுத்து வருகிறது. ஏற்கனவே காசா மக்கள் மனிதாபிமான நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அங்கு தற்போது நிலவும் மழை வெள்ளம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் வெள்ளத்தால் 27,000 கூடாரங்கள் மூழ்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா பகுதிக்கு தடையற்ற வகையில் மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் அனுமதிக்க வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் கடந்த வாரம் அதிகப் பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசாவில் இரண்டாம் கட்ட போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பிலான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையிலேயே அங்கு வன்முறைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top