News

மெக்சிகோவில் அவசரமாக தரையிறங்க முயன்ற விமானம் விபத்து: 7 பேர் பலி

 

மத்திய மெக்சிகோவில் அவசரமாகத் தரையிறங்க முயன்ற சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர் என்று மெக்சிகோ நாட்டின் சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அட்ரியன் ஹெர்னாண்டஸ் தெரிவித்தார்.

மெக்சிகோ நகரத்திலிருந்து மேற்கே சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள டோலுகா விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கைத்தொழில்துறை பகுதியான சான் மேடியோ அட்டென்கோ அருகில் இவ்விமான விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான இந்த தனியார் ஜெட் விமானத்தில் எட்டு பயணிகளும், இரண்டு விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். ஆனால் விபத்து நடந்த பல மணித்தியாலயங்களுக்கு பின்னர் ஏழு உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டதாக ஹெர்னாண்டஸ் கூறினார்.

குறித்த விமானம் ஒரு உதைப்பந்தாட்ட மைதானத்தில் தரையிறங்க முயன்றபோது, ​​அருகிலுள்ள ஒரு வணிக நிறுவனத்தின் உலோகக் கூரையில் மோதி, பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியதாகவும், இவ்விபத்து குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாகவும் ஹெர்னாண்டஸ் கூறினார்.சான் மேடியோ அட்டென்கோ மேயர் அனா முனிஸ், தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில், தீ விபத்து காரணமாக அப்பகுதியில் இருந்து சுமார் 130 பேர் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top