News

கோமாவில் இருந்து மீண்டார் சிட்னி தாக்குதல் பயங்கரவாதி; கொலை உட்பட 59 குற்றச்சாட்டுகள் பதிவு

 

 ஆஸ்திரேலியாவில், ‘ஹனுக்கா’ நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி கோமாவில் இருந்து மீண்ட நிலையில், அவர் மீது கொலை உள்ளிட்ட 59 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டை கடற்கரையில், கடந்த 14ம் தேதி ஹனுக்கா என்ற யூத பண்டிகையின்போது பொதுமக்கள் மீது இருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 16 பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியது சாஜித் அக்ரம், 50, மற்றும் அவருடைய மகன் நவீத் அக்ரம், 24, என, தெரியவந்துள்ளது.

போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில், தந்தை சாஜித் அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார். நவீத் அக்ரமை, அந்தப் பகுதியைச் சேர்ந்த வணிக வளாக உரிமையாளரான அஹமது அல் அஹமது என்பவர் மடக்கிப் பிடித்தார்.

அப்போது துப்பாக்கியை பறித்து, அஹமது திருப்பி சுட்டதில் நவீத் அக்ரமுக்கு காயம் ஏற்பட்டது. அவர் கோமா நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், நவீத் அக்ரமுக்கு நேற்று நினைவு திரும்பியது. இதற்காக காத்திருந்த போலீஸ் அதிகாரிகள் அவரிடம் உடனடியாக வாக்குமூலம் பெற்றனர்.

நவீத் அக்ரம் மீது, 15 கொலை குற்றச்சாட்டுகள், பயங்கரவாத செயல், காயப்படுத்துதல், கொலை முயற்சி, துப்பாக்கி ஏந்தி தாக்குதல், வெடிபொருட்கள் வைத்திருத்தல் உட்பட 59 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சிட்னி மருத்துவமனையில் போலீஸ் காவலில் உள்ள நவீத் அக்ரமிடம், வீடியோ வாயிலாக நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top