அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக ஆபிரிக்க நாடுகளான மாலியும் புர்கினா ஃபஸோவும் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன.
மேற்கு ஆபிரிக்காவில் உள்ள மாலி, புர்கினா ஃபஸோ உட்பட 20 இற்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்து கடந்த டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த உத்தரவுக்கு பரஸ்பர நடவடிக்கையாக, மாலி மற்றும் புர்கினா ஃபஸோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தங்களது நாடுகளுக்குள் அமெரிக்கர்கள் நுழைய அனுமதி இல்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மாலியின் வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பரஸ்பர கொள்கைகளின் அடிப்படையில் மாலி குடிமக்களின் மீது விதிக்கப்பட்டுள்ள அதே தடைகள், நிபந்தனைகள் அனைத்தும் அமெரிக்கக் குடிமக்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, புர்கினா ஃபஸோவின் வெளியுறவு அமைச்சர் கராமகோ ஜீன் – மேரி தரோரே கையெழுத்திட்ட அறிக்கையில், அமெரிக்கக் குடிமக்கள் மீது தடை விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சி அமைத்துள்ள மாலி மற்றும் புர்கினா ஃபஸோ அரசுகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது தெரிந்ததே.
