ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்தனர், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக, பனிப்பொழிவுக்கு இடையே கனமழை பெய்து வருகிறது. கபிசா, பர்வான், டாய்கண்டி, உருஸ்கான், கந்தஹார், ஹெல்மண்ட், பாட்கிஸ், பர்யாப், படக் ஷான், ஹெராத் உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 1,200 கால்நடைகள் உயிரிழந்ததாக ஆப்கன் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேத மதிப்பை அளவிட மதிப்பீட்டு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
