வங்கதேசத்தில் 24 மணி நேரத்தில் இரண்டாவதாக ஒரு ஹிந்து கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்கள் போராட்டத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்தாண்டு பதவி விலகினார்.
தொடர் தாக்குதல் அதன்பின் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது.
அப்போதில் இருந்து அந்நாட்டில் ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
மேலும் வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, இத்தாக்குதல்கள் மிக கொடூரமாக மாறின.
நான்கு ஹிந்துக்கள் வன்முறை கும்பல்களால் அடித்தும், தீ வைத்து எரித்தும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெசூர் மாவட்டத்தில் பத்திரிகையாளரும் தொழிலதிபருமான ராணா பிரதாப் பைராகி, 45, என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மேலும் ஒரு ஹிந்து வியாபாரி கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட சரத் சக்ரவர்த்தி மணி, 40, நர்சிங்டி மாவட்டத்தில் சார்சிந்துார் பஜாரில் மளிகை கடை நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்த போது, திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர்.
படுகாயமடைந்த மணியை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கொடூர தாக்குதல் ஆகும். இதனால் ஹிந்து சமூகத்தினர் பீதியடைந்துள்ளனர்.
