கிறீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான விருப்பங்கள் குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துரையாடி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதில் இராணுவ பயன்பாடும் அடங்கும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் பகுதியளவு தன்னாட்சி பிராந்தியமாக விளங்கும் கிறீன்லாந்தை கையகப்படுத்துவது தேசிய பாதுகாப்பு முன்னுரிமை என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
ஆர்க்டிக் தீவான கிறீன்லாந்தை கையகப்படுத்தும் ட்ரம்பின் திட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் டென்மார்க்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அத்தோடு கூட்டறிக்கையொன்றையும் வௌியிட்டுள்ளன. அந்த அறிக்கை வெளியான சில மணித்தியாலயங்களில் வௌ்ளை மாளிகையின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின் மற்றும் டென்மார்க் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அந்த கூட்டறிக்கையில், கிறீன்லாந்து அதன் மக்களுக்கு சொந்தமானது, டென்மார்க் மற்றும் கிறீன்லாந்து மட்டுமே தங்கள் உறவுகள் தொடர்பான விஷயங்களில் முடிவு செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கிறீன்லாந்து விவகாரத்தில் ஆறு ஐரோப்பிய நட்பு நாடுகள் டென்மார்க்கிற்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு கிறீன்லாந்து தேவை என்று ட்ரம்ப் கடந்த வார இறுதியில் மீண்டும் கூறியதற்கு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலும் நேட்டோவின் முடிவைக் குறிக்கும் என்றார்.
இதேவேளை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கேபிடல் ஹில்லில் நேற்று முன்தினம் நடத்திய ஒரு ரகசிய மாநாட்டில், ட்ரம்ப் நிர்வாகம் கிறீன்லாந்தை ஆக்கிரமிக்கத் திட்டமிடவில்லை, மாறாக டென்மார்க்கிடமிருருந்து அத்தீவை வாங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
