News

பாரிஸில் இரவு விருந்தின் போது இடிந்து விழுந்த கட்டிடம்: 20 பேர் வரை படுகாயம்

இரவு நேர கொண்டாட்டத்தின் போது பாரிஸில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை பாரிஸின் மையத்தில் அமைந்துள்ள ரூ அமெலோட்(Rue Amelot) பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் 5வது தளம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கட்டிடத்தில் இரவு நேர கொண்டாட்டத்தில் 50 பேர் வரை கலந்து கொண்டிருந்த நிலையில், தளம் இடிந்து விழுந்ததில் 20 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை வழங்கினர்.

மீட்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகளுக்கு ஏற்ப ரூ அமெலோட் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த கட்டிடத்தின் மற்ற பகுதியின் உறுதித் தன்மையை ஆராய பொறியியல் வல்லுநர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு கட்டமைப்பு தோல்வி தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கட்டிடத்தின் பழமை மற்றும் அதிகப்படியான மக்களின் உடல் எடை ஆகியவையும் 5வது தளம் இடிந்து விழுந்ததற்கு காரணமாக இருக்குமா என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top