சுயாட்சி பெற்ற டென்மார்க் பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் அந்தத் தீவுப் பகுதிக்கு டென்மார்க் மேலதிக துருப்புகளை அனுப்பியுள்ளது.
மேற்கு கிரீன்லாந்தில் உள்ள காங்கர்லுசுவாக்கியிற்கு கணிசமான துருப்புகள் திங்கட்கிழமை (19) மாலை சென்றடைந்தததாக றோயல் டனிஷ் இராணுவத் தளபதி பீட்டர் பொய்சன் அந்நாட்டு அரச ஒளிபரப்பு நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆர்டிக் பிராந்தியத்திற்கு 58 டென்மார்க் துருப்புகள் சென்றதாக அரச ஒளிபரப்பு நிறுவனமான டிவி2 குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே அங்கு அனுப்பப்பட்ட சுமார் 60 பன்னாட்டு இராணுவப் படை வீரர்களுடன் இந்தத் துருப்புகள் இணைந்துள்ளன.
ஆர்டிக்கின் பிகப்பெரிய நிலப்பகுதியான கிரீன்லாந்தை இராணுவத்தை பயன்படுத்தியேனும் கைப்பற்றும் சாத்தியத்தை ட்ரம்ப் மறுக்காத நிலையிலேயே இந்தத் துருப்புகள் அங்கு சென்றுள்ளன. இந்தத் தீவு அமெரிக்காவின் பாதுகாப்புக்கு தீர்க்கமானதாக உள்ளது என்று ட்ரம்ப் கூறி வருகிறார்.
என்.பி.சி. நியூஸ் தொலைக்காட்சிக்கு கடந்த திங்கட்கிழமை பேட்டி அளித்த ட்ரம்ப், இந்தத் தீவை படைகளைக் கொண்டு கைப்பற்றுவது பற்றிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்திருந்தார்.
கிரீன்லாந்தில் அமெரிக்க துருப்புகளை அதிகரிப்பதற்கு டென்மார்க் விருப்பத்தை வெளியிட்டபோதும் அந்த தீவு விற்பனைக்கு இல்லை என்று வலியுறுத்தி வருகிறது. இந்தத் தீவை கைப்பற்றும் எந்த ஒரு முயற்சியும் வலுவான இராணுவ கூட்டாணியான நேட்டோவை பிளவுபடுத்துவதாக அமையும். 32 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோவில் அமெரிக்காவுடன் டென்மார்க்கும் உள்ளது.
கிரீன்லாந்தை வாங்குவதற்கு ட்ரம்ப் வலியுறுத்துவது ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு சுங்க வரியை அதிகரிப்பதற்கான திட்டத்தை ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருகிறது.
