கிரீன்லாந்து விவகாரத்தில் பிரித்தானியா உட்பட 8 ஐரோப்பிய நாடுகள் மீது அறிவிக்கப்பட்ட 10 சதவீத வரியை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.
நேட்டோ தலைவர் மார்க் ரூட்டேவுடனான மிகவும் பயனுள்ள சந்திப்பிற்குப் பிறகு, கிரீன்லாந்து தொடர்பாக எந்தவொரு வரியையும் விதிக்கப் போவதில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், கிரீன்லாந்து மற்றும் முழு ஆர்க்டிக் பிராந்தியம் தொடர்பாகவும் ஒரு எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
இந்தத் தீர்வு அமெரிக்காவிற்கும் அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புரிதலின் அடிப்படையில், பிப்ரவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவிருந்த வரிகளைக் கைவிடுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, கோல்டன் டோம் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் அதிரடித் திருப்பமாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் உட்பட 8 நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
மேலும், இதில் அமெரிக்காவிற்கு சாதகமாக எந்த ஒப்பந்தமும் முன்னெடுக்கப்படவில்லை என்றால், ஜூன் 1 ஆம் திகதி முதல் இந்த நாடுகள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்த வரி விதிப்பு தொடர்பில் நடவடிக்கை உறுதியா என்ற கேள்விக்கு பதிலளித்திருந்த ட்ரம்ப், 100 சதவீதம் உறுதி என்றார்.
ஆனால், தற்போது டாவோஸில் நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், வரி விதிப்பில் இருந்து ட்ரம்ப் தமது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.
