News

நைஜீரியா: ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டவர்களில் 62 பேர் மீட்பு

 

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, அந்நாட்டின் கண்டுனா மாகாணம் கஜுரா பகுதியில் 3 கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த மத வழிபாட்டு தலங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத வழிபாடு செய்ய அப்பகுதியை சேர்ந்தவர்கள் சென்றனர்.

அப்போது அந்த மத வழிபாட்டு தலங்களுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த ஆயுத கும்பல் அங்கிருந்த 150 பேரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், கடத்தப்பட்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டவர்களில் 62 பேரை பாதுகாப்புப்படையினர் நேற்று அதிரடியாக மீட்டனர். அந்நாட்டின் ஷம்பரா மாகாணத்தில் ஆயுதக்க்குழுவால் பணய கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 62 பேரை பாதுகாப்புப்படையினர் மீட்டனர். மீட்கப்படவர்களில் எத்தனைபேர் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் இருந்து கடத்தப்பட்டவர்கள் என்ற விவரத்தை பாதுகாப்புப்படையினர் வெளியிடவில்லை. அதேவேளை, கடத்தப்பட்டவர்களில் எஞ்சியவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்புப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், இந்த மீட்பு நடவடிக்கையின்போது ஆயுதக்குழுவை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top