சீனாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர கனடாவிற்கு எந்த நோக்கமும் இல்லை என்று பிரதமர் மார்க் கார்னி விளக்கமளித்துள்ளார்.
கனடா, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான தனது சமீபத்திய ஒப்பந்தம், சமீபத்தில் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட சில துறைகளில் மட்டுமே வரிகளைக் குறைத்துள்ளது என்று கார்னி தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், முன் அறிவிப்பு இல்லாமல் சந்தைப் பொருளாதாரம் அல்லாத நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளக்கூடாது என்ற உறுதிமொழிகள் இருப்பதையும் கார்னி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட சில சிக்கல்களைச் சரிசெய்வதே சீனாவுடன் நாங்கள் செய்துள்ள ஒப்பந்தம் என கார்னி குறிப்பிட்டுள்ளார். 2024-ல், கனடா சீனாவில் இருந்து வரும் மின்சார வாகனங்கள் மீது 100 சதவீத வரியும், எஃகு மற்றும் அலுமினியம் மீது 25 சதவீத வரியும் விதித்து, அமெரிக்காவைப் பின்பற்றியது.
இதற்குப் பதிலடியாக, சீனா கனேடிய கனோலா எண்ணெய் மற்றும் பிண்ணாக்கு மீது 100 சதவீத இறக்குமதி வரியையும், பன்றி இறைச்சி மற்றும் கடல் உணவுகள் மீது 25 சதவீத வரியையும் விதித்தது.
இந்த மாதம் சீனாவுக்குச் சென்றிருந்தபோது அமெரிக்காவுடனான தனது நிலைப்பாட்டிலிருந்து விலகி, கார்னி, சில கனடியப் பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பதற்குப் பதிலாக, சீன மின்சாரக் கார்கள் மீதான கனடாவின் 100 சதவீத வரியைக் குறைத்தார்.
கனடாவிற்கு வரும் சீன மின்சார வாகன ஏற்றுமதிகளுக்கு 6.1 சதவீத வரி விகிதத்தில், ஆரம்பத்தில் ஆண்டுக்கு 49,000 வாகனங்கள் என்ற வரம்பு விதிக்கப்படும் என்றும், இது ஐந்து ஆண்டுகளில் சுமார் 70,000 என உயரும் என்றும் கார்னி கூறியுள்ளார்.
மேலும், சீன மின்சார வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட ஆரம்ப வரம்பு, கனடாவில் ஆண்டுதோறும் விற்கப்படும் 1.8 மில்லியன் வாகனங்களில் சுமார் 3 சதவீதம் என்றும், அதற்குப் பதிலாக, மூன்று ஆண்டுகளுக்குள் கனடிய வாகனத் துறையில் சீனா முதலீடு செய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சீனாவுடன் கனடா நெருங்குவதை உணர்ந்த ட்ரம்ப், சமூக ஊடகப் பதிவில் மிரட்டல் விடுத்தார். அதில், கார்னி, சீனாவிலிருந்து அமெரிக்காவிற்குப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை அனுப்புவதற்காக கனடாவை ஒரு இறக்குமதித் துறைமுகமாக மாற்றப் போகிறார் என்று நினைத்தால், அவர் மிகவும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.
