ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமான குளிர் என்பவற்றினால் 61 பேர் உயிரிழந்துள்ளதோடு 110 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் 15 மாகாணங்களில் மழை, குளிருடன் கூடிய வானிலைநிலவுகிறது. இதன் விளைவாக சுமார் 458 வீடுகள் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதிலும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.
கடந்த பல தசாப்தங்களாகத் தொடர்ச்சியான உள்நாட்டுப் போரில் ஆப்கானிஸ்தான் சிக்குண்டிருந்ததால் போதிய உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே இத்தகைய இயற்கை அனர்த்தங்களைச் சமாளிப்பது ஆப்கானுக்கு சவாலாக உள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மழை மற்றும் பனிப்பொழிவினால் மண் வீடுகள் சரிந்து விழுவதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளமை தெரிந்ததே.
